உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

587

அஞ்சலகத்திற்குச் சென்று, அங்கிருந்து பாலக்காட்டிற்குத் தொடர்பு கொண்டார்கள். பாலக்காட்டில் ஹரிஹரன் என்ற ஆசிரியர் இருக்கிறாரா என்று கேட்டு, அப்படி ஹரிஹரன் என்ற ஆசிரியர் பாலக்காட்டிலே கிடையாது என்று தெரிந்து கொண்டு, நேரே கோர்ட்டிற்குப் போய் அங்கே அவர்களைப்பற்றி ஒரு வழக்கைக் கொடுத்து, அங்கிருந்து காவலர்கள் வந்து பாலக்காட்டுக்காரரைக் கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே வழக்கறிஞர் இராஜாஜி அவர்கள் அந்த ஏமாற்றுக்காரர்கள் மீது வழக்கைத் தொடரவும். நீதிபதி அவர்கள் சினம் கொண்டு 200 ரூபாய் அபராதம் விதிக்க, இராஜாஜி அவர்கள், 200 ரூபாயை அவர்களால் கட்ட முடியாது, கொஞ்சம் குறையுங்கள் என்று கேட்டு, பிறகு 50 ரூபாய் அபராதம் என்று விதித்தார்கள். அதைப் பார்த்த அந்தப் பாலக்காட்டு ஹரிஹரன் என்பவர் 50 ரூபாய் கட்டக்கூடிய அந்தஸ்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு வந்து நான் ஏன் ஏமாற்றப் போகிறேன் என்று சொன்னதற்கு. மறுபடியும் இராஜாஜி அவர்கள் வாதாடி, அந்த அபராதத்தை 10 ரூபாயாகக் குறைத்து நீதிபதி உத்தரவு போட்டு விட்டு உள்ளே போன பிறகு, அந்த பத்து ரூபாயை இராஜாஜி அவர்களே கட்டி விட்டு, 'இனி மேல் இப்படி யாரையும் ஏமாற்றாதீர்கள்' என்று சொன்னதாக வாழ்க்கைச் சரித்திரத்தில் படித்துப் பார்த்தேன். இப்படி ஈகை, இரக்கம் காட்ட வேண்டிய நேரத்திலேயும்கூட அவர்கள் ஆராய்ந்துதான் சில முடிவுகளை எடுப்பார்கள். அப்படி எதிலும் ஆராய்ந்து முடிவெடுக்கும் அறிஞர் பெருமகனாகத் திகழ்ந்த இராஜாஜி அவர்கள் இன்றைக்கு நம்மிடத்திலே இல்லை.

இங்கே முன்னவர் அவர்களும், மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் எடுத்துக்காட்டியதைப்போல, அவர்கள் கட்சி, கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தனி அன்பை அனைவரிடத்திலும் காட்டுவார்கள். அவர்களுடைய இறுதிக் காலத்தில் இன்றைய ஆளுங்கட்சிக்கும், அவருடைய கொள்கைகளுக்கும், அவர் கட்சிக்கும் இருந்த தொடர்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள், வீட்டிலே திடீரென்று அவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டது என்ற செய்தியை அறிந்ததும், நானும் நம்முடைய கல்வியமைச்சர் நாவலர் அவர்களும் அவர்களுடைய இல்லத்திற்குக் காலையிலே ஓடோடிச்