596
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
உரை : 87
சஞ்சீவ ரெட்டிக்கு இரங்கல்
நாள் : 16.07.1996
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அவை முன்னவர், கல்வி அமைச்சர் பேராசிரியர் அவர்களால் முன்மொழியப் பட்டுள்ள இரங்கல் தீர்மானத்தில் என்னுடைய கருத்துக்கள் சிலவற்றையும்
இணைத்துக்கொள்ள விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மறைந்த மாமனிதர், இந்தியாவின் 6-வது குடியரசுத் தலைவர், பெருமதிப்பிற்குரிய நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களுடைய மாபுகழை இந்த மன்றத்தில் எடுத்துரைத்து இருக்கின்றார்கள். இந்த மாநிலத்திலே அவர்கள் இதே தலைமைச் செயலகத்தில் அமைச்சராக வீற்றிருந்த காலம் ஒன்று இருந்தது என்பதையும் இரங்கல் தீர்மானத்தில் உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
1989ஆம் ஆண்டு கழக ஆட்சி வந்தபோது நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் சென்னைக்கு வந்து எங்களிடத்திலே அவர்கள் வெளியிட்ட ஒரே ஒரு விருப்பம், இந்தக் கோட்டையில் தான் அமர்ந்து அமைச்சராக பணியாற்றிய அந்த அறையைப் பார்க்க வேண்டும் என்பதாகும். நானும், பேராசிரியர் அவர்களும், மற்ற அமைச்சர் பெருமக்களும் அவர் தங்கியிருந்த இடம் சென்று, அவரை அழைத்து வந்து, கோட்டையிலே விருந்து அளித்து அவர் தங்கிப் பணியாற்றிய அமைச்சர் அறையைக் காட்டியபோது, நின்ற நிலையிலேயே நெகிழ்ந்து போனார். குழந்தைபோல ஒரு
சைகூட அவருக்கு ஏற்பட்டது. “அந்த நாற்காலியிலே சற்று நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்திருக்கிறேனப்பா” என்று சொல்லிவிட்டு, அவ்வாறே செய்தார். அந்த அளவிற்கு தமிழகத்தில், அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட, ஒரு பாச உணர்வை மனதிலே பதிய வைத்திருந்தார்.