உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கெல்லாம் உடன்பிறப்பாக, அனைவருக்கும் உற்ற தோழராக விளங்கிய பெரியண்ணன் அவர்களுடைய மறைவு குறித்து இந்த அவையில் கொண்டு வந்துள்ள இரங்கல் தீர்மானத்தில் என்னையும் இணைத்துக் கொண்டு சில வார்த்தைகளைப் பேச விரும்புகிறேன்.

பெரியண்ணன் அவர்கள் என்னைவிட 6, 7 வயது இளையவர். அவரைவிட 6, 7 வயது மூத்தவனாக இருக்கின்ற நான் அந்த இளையவருடைய மறைவுக்கு ஓர் அனுதாபம் தெரிவிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஆளாகிவிட்டேனே என்பதை எண்ணி, எண்ணி கலங்குகின்றேன். இளமைக் காலத்திலேயே திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தந்தை பெரியாருடைய கொள்கைகளை, பேரறிஞர் அண்ணா அவர்கள் கடைப்பிடித்த வழிகாட்டுதலை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அந்த பொன்மொழியை இதயத்திலே இருத்தி, இயக்கத்திலே எத்தகைய சோதனைகள் வந்தாலும், வேதனைகள் வந்தாலும் அவைகளைப்பற்றிக் கவலைப்படாமல் மன உறுதியோடு இந்த இயக்கத்தைக் குன்றாமல், குறையாமல் வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டவர் மறைந்த பெரியண்ணன் அவர்கள் ஆவார்கள். எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப் போல இளமைப் பிராயத்திலே அவர் இலங்கையிலே வாழ்ந்தார். அப்போதும் திராவிட இயக்கத்திலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தார். அவர் இலங்கையிலே இருந்த அந்தக் காலக் கட்டத்தில்தான் சிங்கள சீறீ என்ற எழுத்து அழிப்புப் போராட்டம் இலங்கையில் தமிழர்களால் நடத்தப்பட்டது. சிங்கள அரசின் அந்த சீறீ என்ற எழுத்துத் திணிப்பை எதிர்த்து தமிழர்கள் அன்றைக்கு கலந்துகொண்டு கார்களில், பெயர்ப் பலகைகளில் இருந்த அந்த சீறீ என்ற எழுத்தை தார் கொண்டு, தூரிகை கொண்டு அழிப்பதற்கு முயன்றபோது போலீசாரால் பெரியண்ணன் கைது செய்யப்பட்டு அவர் கையிலே ஏந்தியிருந்த அதே தார் கலயத்திலே இருந்த தாரை எல்லாம் அவருடைய முகத்திலே ஊற்றப்பட்டு சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார் என்பது பெரியண்ணனுடைய போர்க்கால வரலாறுகளில் ஒரு பக்கம் ஆகும்.

தமிழ்நாட்டில் மிகப் பெரிய ஒன்றியம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம். அந்த ஒன்றியத்தினுடைய தலைவராக