கலைஞரின் சட்டமன்ற உரைகள்
611
அரசோடு ஒத்துழைத்து உருவாக்கப்பட்ட பரம்பிக்குளம் ஆளியாறு திட்டத்திலேயிருந்த சில பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு நான் கேரளாவுக்குச் சென்று, திருவனந்த புரத்தில் அவரோடு ஒரு நாள் முழுவதும் விவாதிக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தப் பிரச்சினையில், அதிகாரிகளோடு உட்கார்ந்து கலந்து பேசியபோது, எந்த முடிவையும் எங்களால் எடுக்க முடியவில்லை. நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்த திரு. ஈ.எம்.எஸ். அவர்கள் திடீரென்று என்னைப் பார்த்து, 'கொஞ்சநேரம் தனியாகப்' பேசினால் பிரச்சினை முடிந்து விடும். இரண்டு அரசுகளுடைய அதிகாரிகளையும் தயவுசெய்து வெளியே இருக்கச் சொல்லிவிட்டு நாம் பேசுவோமா' என்றார். 'சரி' என்று ஒத்துக்கொண்டேன். இருவரும் பேசினோம் 'பிரச்சினை' பரம்பிக்குளம் - ஆளியாறு பிரச்சினை, இரண்டு நிமிடங்களில் சுமுகமாக முடிவுற்றது. அதுமாத்திரம் அல்லாமல் - அவருக்கும் எனக்கும், மாநிலத்தினுடைய முதலமைச்சர் என்கின்ற முறையிலே மாத்திரம் அல்லாமல், எதிர்க்கட்சிகளுடைய தலைவர்கள் என்கின்ற முறையிலேகூட நீண்டகாலப்பழக்கம் உண்டு.
குறிப்பாகச் சொல்லவேண்டுமேயானால், 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் ஈ.எம்.எஸ். அவர்களும், நானும் சென்னையிலே ஒரு கூட்டத்திலே கலந்து கொண்டோம். அப்பொழுது அவர்கள் சொன்னார்கள். 'நான் ஏன் இங்கே வந்து கருணாநிதியுடன் கூட்டத்திலே கலந்து கொள்கிறேன் என்றால், இந்தியாவிலேயே சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக்கூடிய ஒரே ஒரு இடம், இப்பொழுது தமிழ்நாடாகத்தான் இருக்கிறது; எனவேதான் அந்தச் சுதந்திரக் காற்றை சுவாசிக்க தமிழகத்திற்கு வந்து இருக்கிறேன்' என்று அன்றைக்குக் குறிப்பிட்டு தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தினார்கள்.
இறுதிக்காலம் வரையிலே தான் சார்ந்த இயக்கத்திற்கு தான் சிறப்போடு திகழ்ந்த இயக்கத்திற்கு, தான் உழைத்த இயக்கத்திற்கு, தான் வளர்த்த இயக்கத்திற்கு அவர் பணியாற்றினார் என்பதற்கு அடையாளமாக, மலையாள மொழியிலே வெளியிடப்படுகின்ற தேசாபிமானி என்ற அவருடைய சொந்தக் கட்சிப் பத்திரிகைக்குக் கடைசி நேரத்திலேகூட, அவர் உயிர்