பக்கம்:அருளாளர்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 * அருளாளர்கள்


அறிவுறுத்தலாம், பிறர் அறியுமாறு செய்யலாம். ஆனால், உணர்ச்சியால் உணரப்படவேண்டியவற்றைப் பிறர் உணருமாறு செய்தல் முற்றிலும் இயலாத காரியம்.

இம்முறையில் பார்த்தால் மெய்ப்பொருள் அறிவு நிலை அனுபவம், சொற்களால் விளக்கப்பட முடியாத ஒன்று. ஒருவாறு விளக்கினாலும் அது சர்க்கரை இனிக்கும் என்று மட்டும் கூறினால் என்ன பயனைத் தருமோ அதே பயனைத்தான் விளைக்கும். மெய்ப்பொருள் அறிவுநிலை அனுபவம் ஏனைய அனுபவங்களினும் வேறுபட்டது. ஏனைய அனுபவம் தோன்றும் பொழுது அறிவுக்கு அங்கே வேலை இல்லை. அவ்வுணர்ச்சியால் அறிவு விளக்கம் அடைவதில்லை. ஆனால்,மெய்ப்பொருள் அனுபவத்தில் அறிவு,விளக்கமும் கூர்மையும் அடைகிறது. அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட பேருண்மைகளையும் அழியாமல் (Eternal truths) காணுமாறு செய்கிறது. கண்ட உண்மை விளக்கத்தால் மெய்ப்பொருள் அறிவு பெற்றவர்கள் 'உள்ளொளி' பெறுகிறார்கள், இந்நிலைபற்றிச் சிறந்த ஆராய்ச்சி ஒன்றை மேனாட்டுத் தத்துவப் பேராசிரியரான ‘வில்லியம் ஜேம்ஸ்’ செய்து ‘Mysticism’ என்ற தம் கட்டுரையில் எழுதி இருக்கிறார். பெரும்பாலும் அவர் கூறியன. நாமும் ஒத்துக் கொள்ளக் கூடியனவே. இந்நிலை தானே அமைவது ஒன்றாயினும் ஓரளவு இதனை இயல்பாகவே பெற்றவர் பிறகு பயிற்சியால் இதனை வளர்த்துக் கொள்கின்றனர். இவர்கள் செய்யும் பலவகைப் பயிற்சிகளில் யோகமும் ஒன்று. யோகம் அல்லாத வேறு வழிகளாலும் இந்நிலையை அடையலாம் என்பதற்கு நம் நாட்டுச் சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களுமே சான்று. மேனாடுகளில் ‘செயிண்ட் இக்னேஷஸ்’, ‘செயிண்ட் தெரசா’ போன்றவர்களும் இத்தகைய சித்தி பெற்றவர்களேயாவர்.