பக்கம்:அருளாளர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 அருளாளர்கள்

(பறவையைவிட வேகமாகச் செல்லுகின்ற பிராணனாகிய அக்குதிரையின்மேல் ஏறிக்கொண்டால் களிப்பிற்கு வேறு கள்ளுண்ண வேண்டுவதில்லை) இவ்வாறு கூறுவதால் மனிதன் நன்கு வாழவும் இருக்கவும் தவம் வேண்டற்பாலது என்ற உண்மை நன்கு விளங்கும். தவம் என்று கூறினவுடன் அது மறு உலகம் செல்ல விரும்புபவர்கள் மட்டுமே ஏறும் வண்டி என்ற எண்ணம் பலர் மனத்தில் தோன்றுகிறது. மறு உலகம் செலுத்தும் காரியத்தைத் தவம்

மட்டும் செய்வதில்லை. தவத்தின் அப்பாற்பட்ட மெய்யுணர்வு இருந்தால் ஒழிய வானாடு வழி திறப்பதில்லை. ஆகவே, வானாட்டை நம்பாமலும்,

அங்குப் போக விரும்பாமலும் இருப்பவர்கட்கும்கூடத் தவம் வேண்டற்பாலதே என்கிறார் திருமூலர். இந்த உலகில் செம்மையாக வாழ வேண்டுமானாற்கூடச் சோம்பல் இல்லாமல், நல்ல உடலுடன் இருப்பதுதானே சிறந்தது. அதைத்தான் செய்கிறது தவம் என்று இப்பாடல் நமக்கு அறிவிக்கிறது.

ஏன் மனிதன் தவத்தை மேற்கொள்ள வேண்டும்? உலகிலுள்ள அனைத்தும் நிலையாமை உடையவாகலின் தவம் வேண்டும்! இதனை அறியாதார் அறியாதாரே. நிலையாமையை அறிந்து உணர்ந்த யார்தான் சும்மா இருக்க முடியும்? ஆகவே நிலையாமைபற்றித் திருமூலர் வருந்திக் கூறுகிறார்.

‘பாலன் இளையன் விருத்தன் எனநின்ற

காலம் கழிவன கண்டும் அறிகிலார்

ஞாலங் கடந்(து) அண்டம் ஊடறுத் தானடி

மேலும் கிடந்து விரும்புவன் நானே.”

(திருமந்-181)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/13&oldid=1291359" இலிருந்து மீள்விக்கப்பட்டது