பக்கம்:அருளாளர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 * அருளாளர்கள்

16


16 அருளாளர்கள்

வெறும் பேச்சளவில் நில்லாமல் அவர்கள் வாழ்வுடன், குருதியுடன் கலந்த ஒன்றாக இருந்தன. ஆனால், நம்மைப் பொறுத்தவரையில் சமயம் என்பது தற்போது உள்ளீடற்ற போர்வையாக பயன்படுத்திக் கொள்ளும் கருவியாக அமைந்து விட்டது. பெரியோர்களாகிய அவர்கள் வாழ்ந்து காட்டியதை மறந்துவிட்டு அவர்கள் கூறியபடி வாழவும் மறந்துவிட்டு அவர்கள் பாடல்களை மட்டும் மனனம் செய்து ஒப்பிப்பதால், பாராயணம் செய்வதால் எப்பயன் விளையும்? வெறும் பாராயணம் பயன் தருமெனில் ஒலிப்பதிவு எந்திரங்கள் அனைத்துமே பயன் பெற்றுவிடும்!

சைவர்களாகிய நாம் நம் நெஞ்சில் கை வைத்து நம் முன்னோர்களாகிய நால்வர் சென்ற வழியில் ஓரளவாவது செல்ல முற்படுகிறோம் என்று கூற முடியுமா? அவர்கள் பாடல்களைப் படிக்கிறோம்; படிப்பிக்கிறோம்; ஆனால் உணர்கிறோமில்லை. கற்றல் கேட்டல் முதலியவற்றின் அப்பாற்பட்டுள்ள உள்ளத்து உணர்வோடு ஒன்றுகிறோமோ?

திருமூலர் ஆன்மீக வாழ்க்கையில் எத்துணைத் துாரம் முன்னேறிச் சென்றுள்ளாரோ அதே அளவுக்குப் புற உடம்பு பற்றியும் அறிந்திருந்தார். நரம்பு மண்டலங்களைப் பற்றி உடற்கூறு வல்லுநர்கள் இன்று எத்துணைத் தூரம் அறிந்து பேசுகிறார்களோ அத்துணைத் தூரம் மூலரும் அறிந்து வைத்திருக்கிறார்.

இறைபணியில் எத்துணை முன்னேறிச் சென்றாலும் இப்பெருமக்கள் ஏனைய உயிர்கள் இடத்துக் கொண்டு உள்ள அன்புக்கு எல்லையே இல்லை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. இறைவன் உயிர்களினின்று வேறானவன் என்று இவர்கள் கருதவே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/25&oldid=1293036" இலிருந்து மீள்விக்கப்பட்டது