பக்கம்:அருளாளர்கள்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போகின்றன என்று நினைத்தால் அந்த நினைவில் ஒரளவு நியாயம் உண்டு. முதல் வகுப்புப் படிக்கும் இளங்குழந்தைக்குக் கணக்குப் பயிற்சி தர வேண்டுமானால் அவன் புரிந்து கொள்ளும் முறையில் சிறிய சிறிய கூட்டல் முதலிய கணக்குகளைக் கற்றுத்தர வேண்டுமே தவிர கணக்கு என்ற பொதுப்பெயருள் அடங்கும் என்ற காரணத்திற்காக முதுநிலை படிக்கும் மாணவர் பயிலும் கணக்கை அக்குழந்தைக்குச் சொல்வதால் பயனில்லை தான்.

இப்பெருமக்கள் அருளிய பாடல்களைப் பொறுத்த வரை இந்த உவமை செல்லாது. இப்பெரியோர்கட்கும் நமக்கும் உள்ள வேறுபாடு அளவால்தானே தவிரத் தன்மையால் அன்று. இவர்கள் வாழ்வில் என்றோ ஒரு நாள் ஒரு வினாடி நேரம் தாமஸ் குணத்தில் ஈடுபடுதல் உண்டு. மானிட உடம்பு எடுத்தமையின் அதற்குரிய சில இயல்புகள் இல்லாமல் போவதில்லை. நம்மைப் பொறுத்த வரை வாழ்நாளில் என்றோ ஒரு நாள் ஒரு வினாடி நேரம் சத்துவ குணத்தைப் பெறுகிறோம். அவர்களைப் பொறுத்தமட்டில் வாழ்நாளில் ஒரு வினாடி தாமஸ் குணமும் நம்மைப் பொறுத்தவரை ஒரு வினாடி சத்துவ குணமும் வெளிப்படக் காண்கிறோம்.

மானிட உடம்பெடுத்த யாரும் அதனுடைய தொல்லைகளிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று விடுதல் என்பது இயலாத காரியம் அது இயற்கையும் அன்று. முழுமுதற் பொருளும் உயிர்கள்மாட்டுக் கொண்ட பரம கருணையின் காரணமாக மானிட வடிவு தாங்கி அவர்கட்கு அருள் செய்ய வருங்காலத்திற்கூடத் தான் எடுத்த மானிட உடம்பு காரணமாகச் சில தொல்லைகளை ஏற்றுக் கொள்கிறது. இறைவன் தொல்லைகளை ஏற்றுக் கொள்கிறான் என்றுதான் கூற வேண்டுமே தவிர அத்தொல்லைகளை நம்மைப் போன்று அவனும்