பக்கம்:அரை மனிதன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



102

அரை மனிதன்



"அடப்பாவி"

"யாரை"ம்மா சொல்றே"

"யாரைச் சொல்றதுன்னுதானே தெரியவில்லை”

"அம்மா யாரையும் அவர்கள் செய்கிற தவறை வைத்து முடிவு செய்யக் கூடாது. அவர்களால் பிறர்க்கு நன்மையா தீமையா என்பதை வைத்துத்தான் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் உயிரோடு வாழவேண்டுமானால் ஏதாவது தவறு செய்யத்தான் நேர்கிறது. தவறு செய்யத்தான் வேண்டும். ஆனால் தேவைக்கு மேல் தவறு செய்யக் கூடாது. அவள் அந்தத் தவறுகள் செய்யாவிட்டால் உங்கள் இருவரையும் காப்பாற்றி இருக்க முடியாது. நீங்கள் இரண்டு பேரும் மானம் கெட்டு உங்கள் மருமகளிடம் போய் நிற்க வேண்டும். அவள் கையேந்தி நிற்க வேண்டும். அவள் வளர்த்திருக்கும் அல்சேஷியன் நாய் உங்கள் இடத்தை உங்களுக்குக் காட்டி இருக்கும். ஒரு சில தவறுகள் செய்தாலே அவர்கள் கெட்டவர்கள் என்று நினைக்கிற பழக்கம் உங்களுக்கு ஊறிவிட்டது."

"நான் பழகிய கூட்டம் தவறிலேயே வாழ்கிறவர்கள். அவர்களிடம் மிக உயர்ந்த பண்புகளைக் காண முடிந்தது. யாரும் தேவைக்கு மேல் தவறு செய்யமாட்டார்கள். ஆனால் தம்பி தேவைக்கு மேல் தவறு செய்யப் பழகிவிட்டான். அவன் மிக நல்லவன்; அவன் மேல் எந்தக் குறையும் காணமுடியாது. உங்கள் மருமகள் படித்தவள்; பண்பு உள்ளவள், ஒழுக்கத்தில் உயர்ந்தவள். அவளை நீங்கள் மதிப்பீர்கள். அவள் மிக உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்தவள். எந்தத் தவறும் செய்யாதவள். ஆனால் அவள் யாருக்காவது நன்மை செய்கிறாளா? அவளால் இந்தச் சமூகத்துக்கு எந்த நன்மையாவது உண்டா? நீங்கள் பட்டினியால் வேதனைப் படும்பொழுது அவள் வந்து நின்றாளா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/104&oldid=1462001" இலிருந்து மீள்விக்கப்பட்டது