பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


மிருகங்களை எதிர்த்துத் தாக்கிக் கொல்லத் தொடங்கி அவைகளின் மாமிசங்களை உண்ணத் தலைப்பட்டபோது தெரிந்து கொண்ட சுவையானது, மிருகங்களைத் தேடிக் கொல்லத் தூண்டியது. அதன் ஆரம்பம் தான் வேட்டையாடுதல். கொல்லப் பயன்பட்ட ஆயுதங்கள் தான் கூரான கற்கள், கூரான தடி, வேகமாக வேலை செய்யும் வில் அம்பு போன்றவையாக மாறின.

மூன்றாவது கட்ட விளையாட்டுத் தொடக்கம், கற்கால மனித இனம், ஓரிடத்தில் தங்கி, ஒய்வினை அனுபவித்து, ஒன்றுகூடி சமுதாய வாழ்க்கையை வாழத் தொடங்கியபோது ஏற்பட்டிருக்கக் கூடும்.

இயற்கைத் தாக்குதல்களுக்குப் பயந்து ஒன்று சேர்ந்த மனித இனம், மற்றவர்களை அடிமைப்படுத்தி, தலைமைப் பதவியை பெற முனைந்த போது சிறுசிறு கூட்டமாகப் பிரியத் தொடங்கியது.

அந்தந்தக் கூட்டத்திற்கு ஓர் எல்லை, ஒரு தலைவன், அவர்களுக்கென்று பத்திரமான முறைகள், பாதுகாப்பு வழிகள் என்றெல்லாம் ஏற்பட்டன. மற்றவர்களை எதிரிகளாக எண்ணும் வெறித்தனம் மேலோங்கிய போது, அவர்களை அழிக்கப் புதுப்புது ஆயுதங்கள் தயாராயின. போர்கள் அடிக்கடி ஏற்பட்டன.

அமைதி வேண்டி அச்சத்திற்கு ஆட்பட்டு சமுதாயமாக சேர்ந்தவர்கள் இடையே ஆக்ரமிப்பு உணர்ச்சியும், ஆவேச எழுச்சியும் ஏற்பட்டதால், போர்களும், போராயுதங்களும் அளவில் பெருகி, வடிவில் பலப்பல விதங்களில் பிறப்பெடுத்தன.

1. வில் அம்பு. 2. வேல். 3. கனமான பொருளை எறிதல். 4. குறிபார்த்து வீசுதல். 5. கத்திச் சண்டை.