பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12.விளையாட்டு வினையாகிறது


வரலாற்றுக்கு அப்பாற்பட்ட காலத்திலிருந்தே மனித வாழ்க்கையில் விளையாட்டு வடிவம் பெற்றுக் கொண்டிருந் திருக்கிறது. ஆதிகால மனிதனது வாழ்க்கையின் ஆரம்பமே, இயற்கைச் சூழ்நிலை யில் எழுந்த இடர்ப்பாட்டிலும், எதிர் நீச்சலிலுமே நீக்கமற நிரவிக்கிடந்திருக்கின்றது.

ஆதிகால மனிதனுக்கு வேலை என்ன, விளையாட்டு என்ன என்ற வேற்றுமை தெரியாதவாறு, அவனுடைய வாழ்க்கைமுறை அமைந்திருந்தது. அவனது உள் உணர்வுகளே அவனை உந்தி இயக்கிக் காத்தன.

உலகத்தில் மாறி மாறி வந்த இயற்கைப் பருவங்களின் மாற்றங்கள், அவனுடைய உணர்வுகளுக்கு உணவாகி, அவனது அறியாமையை அகற்றி, விழிப்பூட்டும் அனுபவங் களாக மலர்ந்து வழிகாட்டி, வாழும் வகையை உணர்த்தின.

உட்காரவோ உறங்கவோ ஓர் இடமில்லாமலும், உடுத்திக் கொள்ளவோ மானம் காக்கவோ, உடைகள் இல்லாமலும், உண்டு மகிழவோ உடலை வளர்க்கவோ உணவுகள் கிடைக்காமலும், விலங்கோடு விலங்குகளாக, மனிதன் விளங்காமல் வாழ்ந்த காலத்தில், பசியுணர்வு அவனை பாடாய் படுத்திய போது, காய்களை, கனிகளை, கிழங்குகளை, இலைகளை, தழைகளைத் தின்றான்.