பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அறப்போர்



ஒரு இலட்சியத்தைப் பெறுவதும், அதனை ஈடேற்ற, எத்தகைய தியாகம் செய்யத் தயாராகி விடுவது என்ற உள்ள உரம் பெறுவதென்பதும், சாமான்யமான காரியமல்ல! அந்தச் சாதனையில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.

நாம் ஓர் தனி இனம்--தன்னலக்காரரின் சூழ்ச்சியினால் தாழ்ந்துபோனோம்; நாடாண்ட இனம் எனினும், நயவஞ்சகர்களிடம் சிக்கி நசித்துப்போனோம் என்பதை அறிந்துகொண்டோம்.

நாம் கூறுவதுபோல, திராவிட இனம் என்று கூறிக்கொள்ள மனம் இல்லாத சில பலரும் கூட, தென்னாட்டவர் - தென்னிந்தியர்--தமிழர்--என்று, பலப்பல பதங்களைக் கூறிடுவர். ஆனால் பாதையோ, ஒன்றுதான். திராவிட இனத்தின் மார்க்கத்துறை ஆரியரிடமும், அரசியல் டில்லியிலும், பொருளாதாரம் பம்பாயிலும் பிணைக்கப்பட்டிருப்பதை நாம் கூறி, தனி அரசு கோருகிறோம்; திராவிடநாடு திராவிடருக்கே என்று பேசுகிறோம். அந்த அளவுக்கும் முறைக்கும் வரமறுக்கும் பலர், வடநாட்டவருக்கு இங்கு வாணிபத் துறையிலே ஆதிக்கம் வளர்ந்து வருவதைக் கண்டு வருந்தி, இது ஆகாது என்றுதான் பேசுகின்றனர்; தனிநாடு கோரவில்லை என்ற போதிலும், வடநாட்டாரின் இந்தப் பொருளாதார ஆதிக்கம் கூடாது என்று கூறாமலில்லை.

வடநாட்டின் நோக்கமெல்லாம், இந்தியா--இந்திய தேசியம்--இந்திய கலாசாரம் என்ற வாய் வேதாந்தம் பேசிக்கொண்டே, திராவிடத்தை--தென்னாட்டை, வெறும் விவசாய நாடாகவும், மூலப்பொருள்களை உற்பத்திசெய்து வெளியே அனுப்பிவிட்டு, வெளியார் தயாரித்து அனுப்பி