பக்கம்:அறவோர் மு. வ.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

33

உயிராலும் உணர்வாலும் வாழும் வாழ்க்கையே. உயர்ந்த வாழ்க்கை என்பதைப் பொன் முடி-ஆறுமுகம் இவர்களின் வாழ்க்கையைக் கொண்டு அறிவுறுத்துகிறார்.

"பொன்முடி! எப்படியோ வாழ்ந்தோம்! உலகத்தை வாசற்படிக்கு வெளியே விட்டுவிட்டு வாழ்ந்தோம். உலகப் பற்றை விட்ட இடம்தானே வீடு! நாம் வாழ்ந்த வாழ்வு வீட்டு வாழ்வுதான். பிறருடைய புகழையும் மதிப்பையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்தோம். உலகத்தை உள்ளே விட்டிருந்தால் வாழ்க்கை ஒரு பெருஞ்சுமையாகி விட்டிருக்கும். நமக்கோ வாழ்க்கை ஒரு நல்ல விளையாட்டாகவே முடிந்தது. இன்பம் துன்பம் இரண்டிலும் விளையாடினோம். வாடகை வீட்டில் குறைந்த வருவாயில் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தோம். பணம் நிறைந்த வாழ்க்கை இல்லையானாலும் மனம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தோம், போதும்!"
-அந்த நாள், பக். 101

இப்படி எளிமையாக-அன்பாக உயிரோடு உணர்வோடு கலந்து வாழும் வாழ்வில் விட்டுக் கொடுக்கும் தன்மை இருத்தல் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை எளிதாக நடக்கும் என்று தங்கைக்கு உணர்த்துகின்றார்.

"ஒருவர் பொறை இருவர் நட்பு என்னும் நாலடியாரின் பொன்மொழி, வாழ்க்கையின் மந்திரமாக விளங்க வேண்டும். ஒருவேளை கணவனும் ஒருவேளை மனைவியும் விட்டுக் கொடுத்தால்தான் வாழ்க்கை

எளிமையாக நடக்கும்."
-தங்கைக்கு, பக். 23.
"அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கி நட. உரிமைக்காகப் போராடிக் காலங்கழிக்காதே.”
-தங்கைக்கு, பக். 39
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/36&oldid=1234828" இலிருந்து மீள்விக்கப்பட்டது