பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

வானவில்லைக் கலைமணி காண்கிறார். அதன் ஏழு வண்ணங்கள் அவரைக் கவருகின்றன. அந்த ஏழு வண்ணங்களோடு அண்ணாவை ஒப்பிட்டு அவரைக் காலம் எழுதிய ஒரு வானவில்லாகக் கண்டு மகிழ்கிறார்!

வானவில்லின் ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு மலரை அல்லது தாவரத்தைச் சுட்டி அவற்றின் இயல்புகளையெல்லாம் ஒரு தாவரவியல் அறிஞர் சொல்வதுபோலச் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.

‘மாதவி' ஒரு கொடி (குருக்கத்திக் கொடி) அதைச் சொல்ல முற்பட்டதும், அதைப் பயிரிட வேண்டிய முறை, அதன் பூ, இலை, அமைப்பு, இலக்கியத்தில் அது பெற்றுள்ள இடம், ஆகிய அனைத்தையும் கூறி விடுகிறார்.

"மாதவிக் கொடியை கன்னட மொழியிலும் 'மாதவி' என்றே அழைப்பர் ஒரிய மொழியில் அதனை 'மாதபி’ என்றும், 'மாதபிளதோ' என்றும் கூறுவர். தாவர நூலறிஞர்கள் அதனை ஆங்கிலத்தில் Madabilota 'மாடபிளோட்டா' என்று அழைக்கின்றனர்" என, பல அரிய செய்திகளை இடையிடையே சொல்லி நம்மை வியக்க வைக்கிறார் கலைமணி.

வேங்கைப் பூ என்றதும் - "மறத்திற்கு இலக்கணமாக புலியின் பெயரை ஒரு மரத்திற்குச் சூட்டி, மறத்தின் மாண்பை மேதினிக்குப் பரப்பிய நாடு; தமிழ்நாடு தானே தம்பி" - என்கிறார். மரம், மறம் ஆகிய இரு சொற்களும் இத்தொடரில் ஒரு தனி அழகையே பெறுகிறது எனலாம்!

"அண்ணாவின் தலைமையிலே துவங்கிய இயக்கம்; வீரம் விளைந்த தமிழ் நிலத்தில் தோன்றியது என்பதை மட்டும் மறந்து விடாதே தம்பி! அவரது கட்சி ஒன்றுதானே 'வேங்கை'யைப் போல வீரம் பொருந்திய பாசறையாக விளங்கியது. அந்தக் கட்சியின் வீரத்திருவுருவமாக - தன்னேரில்லாத வழிகாட்டியாக - அண்ணா காட்சியளித்தார்" என, அண்ணாவை வேங்கைப் பூவாகவும், கட்சியை வேங்கை மரமாகவும் கலைமணி சொல்லும் அழகே அழகு!