பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தனக்கு நல் ஊழ் இல்லாமை) காரணமாகத் தனக்கு இத்தோல்வி அமைந்தது என்று நினைக்கிறான்; அதனை ஏற்றுக்கொள்கிறான்.

புராதனப் பொதுவுடைமைச் சமூகத்தில் வாழ்ந்திருந்த, 'ஊழ்' அல்லது ‘முறை' என்னும் பங்கீட்டுத் தெய்வம் இந்த உணர்வின் காரணமாகவே சரிந்து விழுந்து மறைந்து போய் விடுகிறது.

அரசுகளின் வளர்ச்சியில் அடுத்த கட்டமாக அதிகார மையத்தில் உள்ளோர் ஆடும் ஆட்டம் ‘சூது' ஆகும். அரசு என்னும் நிறுவனத்தின் வளர்ச்சிப் போக்கில் சூது ஒரு பொருள் மிகுந்த இடத்தினைப் பெறுகிறது. எனவேதான் அந்த ஆட்டம் அரசர்களுக்கும் இளவரசர்களுக்கும் விலக்கப்படாமலிருந்தது. தருமரும் நளனும் சூதாடித் தோற்ற கதையினை இங்கே நினைத்துக்கொள்ளலாம். தருமன் சூதாடிய நிகழ்ச்சியை விவரிக்கும் வில்லிபாரதம் அப்பகுதிக்குச் சூது போர்ச் சருக்கம் என்றே பெயர் தருகிறது. அதாவது அதிகார மையங்கள் உருவாகும் போது போருக்குரிய மதிப்பினைச் சூதாட்டம் பெற்றிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று எனலாம்.

செல்வமோ வறுமையோ வந்து சேர்வதற்குரிய காரணமாக மனிதனை மீறிய ஒரு சக்தி உள்ளது என்னும் கருத்தும் உணர்வும் இப்படித்தான் மனித மனங்களில் படிப்படியாக உருவாகத் தொடங்கின. தனிச்சொத்துரிமையின் தோற்றத்தினை மனித மனம் ஏற்றுக்கொண்டது.

வேதகாலத் தொன்மங்களைப் பற்றி எழுதும் நரேந்திரநாத் பட்டாச்சார்யா, ரிக்வேதத்தில் ‘அக்ஸசூக்தம்' எனும் பகுதியில் பேசப்படும் 'அக்ஸ' என்னும் தெய்வத்தினைச் சூதாட்டத்தின் கடவுளாகக் காண்கிறார். ரிக்வேத காலப் பங்கீட்டுத் தெய்வமான ‘ரித' எனும் தெய்வத்திடம் ‘அக்ஸ' தன் பத்து விரல்களையும் விரித்து நீட்டிக்காட்டிப் பேசியதாக வரும் ஒரு குறிப்பினையும் சுட்டுகிறார். ராஜசூய யாகத்தில் ஒரு பகுதியாக அரசன் சூதாடும் செய்தியும் ரிக்வேதத்தில் பேசப்பட்டுள்ளது.