பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

நெறி ஒருபோதும் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றதில்லை.சமூகத்தின் மிகச்சிறிய அசைவுகளில் ஒன்றாக அதுவும் இருந்தது. அவ்வளவே. தொல்காப்பியம் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்கூடக் கணவனும் மனைவியும் இணைந்தே அறஞ்செய்ய வேண்டும் என்று வரையறை செய்கிறது.

தமிழில் முதன்முதலில் துறவு நெறியைப் பெருமைப்படுத்திப் பேசியவர் திருவள்ளுவரே. வள்ளுவர் வகுத்த அறங்களில் தமிழரை வெற்றிகொள்ள முடியாமற் போனவை கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை, துறவு ஆகிய மூன்று மட்டுமே.

உலக அரங்கில் சமண பௌத்தத்திற்குப் பின்னரே ஏனைய மதங்கள் துறவு நெறியைப் பெருமைப்படுத்தின.

கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னரே கிறித்துவமும் துறவு நெறியை ஏற்றுக்கொண்டது. தமிழ்நாட்டுச் சைவம் கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் மடங்களை உருவாக்கியபோது துறவு நெறியை ஏற்றுக்கொண்டது. ஆனால் அதைக் கொள்கையாகப் பரப்ப வில்லை. தமிழ்நாட்டு வைணவத்தில் மடங்களின் ஜீயராகப் பொறுப்பு ஏற்பவர்கள் அப்பொழுது முதல் குடும்பத்தைவிட்டு விலகவேண்டும் என்பதே வழக்கமாக இருக்கிறது.

சமண பௌத்தங்கள் போதித்த துறவு நெறிக்கு மாறாகக் குடும்பம் என்ற நிறுவனத்தினைப் பேணியது பக்தி இயக்கத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஒன்று ஆகும். எனவேதான் சிவபெருமானை உமையொருபங்கனாகச் சைவம் காட்டியது. வைணவம் “அகலகில்லேன் இறையும் என்று அவர்மேல் மங்கை உறைமார்பன்” ஆகக் காட்டியது. அத்துடன் வைணவத்தின் வடகலையார், 'திருமாலைப்போலத் திருமகளும் முத்திப் பேறு அளிக்கவல்லள்' என்று கூறினர்.

வள்ளுவருக்குப் பிறகு தமிழ் இலக்கியங்களும் துறவின் பெருமையினை விரித்தோ விதந்தோ பேசவில்லை. வாய்மொழி இலக்கியங்களும் துறவினைப் பெருமைப்படுத்திப் பேசவில்லை.