பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

காணப்படவில்லை. 'அம்மணம் பட்டிலாவையெயிற்று ஐயையைக் கண்டாயோ தோழி' என்று சிலப்பதிகாரம் (வரந்தரு காதை) இந்தச் சொல்லை எடுத்தாளக் காண்கிறோம். இந்தச் சொல் குறைவு என்ற பொருளில் மட்டுமே அந்தக் காலத்தில் வழங்கியுள்ளது. ‘ஆடையின்றி' என்ற பொருளில் மக்கள் வழக்கில் மட்டுந்தான் காணப்படுகிறது; இலக்கியங்களில் காணப்படவில்லை.

குறைந்தது கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமண மதம் நுழைந்து செல்வாக்குப் பெற்றுவிட்டதென்று சங்க இலக்கியம் காட்டுகின்றது. ஆனாலும் தமிழிலக்கியப் பரப்பில் சைவ, வைணவ இலக்கியங்களிலேயே ஜைனர்களைக் குறிக்கச் சமணர், அமணர் ஆகிய சொற்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சமண மதம் துறவினைப் பெருமைப்படுத்திய மதமாகும். சமணத் துறவிகளில் திகம்பரர் (திசைகளையே ஆடையாக உடுத்தியவர்; பிறந்தமேனியராய் இருப்பவர்), சுவேதாம்பரர் (வெள்ளையாடை உடுத்தியவர்) என இரண்டு பிரிவினர் இருந்தனர். மலைக்குகைளைப் பாழிகளாக மாற்றித் தவம் செய்து வந்தவர்கள் திகம்பரத் துறவிகளே. வெள்ளையாடை உடுத்திய துறவிகள் பள்ளிகளை (மடங்களை) அமைத்து வாழ்ந்தனர். அம்மணம் என வழங்கும் சொல் ஆடையில்லா அமணர்களைக் குறிக்கப் புதிதாகத் தோன்றுகிறது.

நிர்வாணம் என்ற செயலையும் கோட்பாட்டையும் தமிழ்ச் சமூகம் தனது வரலாற்றில் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள மறுத்தே வந்திருக்கிறது. சைவக்குடியில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதம் புகுந்தார். மீண்டும் சைவத்திற்குத் திரும்பினார். சமண மதத்தில் தாம் திகம்பரத் துறவியாக வாழ்ந்த கதையை நினைத்து, அவர் வருந்திப் பாடுவதைத் தேவாரப் பாடல்களில் காண்கிறோம்.

ஆடையில்லாச் சமண துறவிகள் பசித்தபோது மட்டும் பிச்சையேற்று உண்ண வேண்டும். கலத்திலே பிச்சை ஏற்கக் கூடாது. கையிலேதான் பிச்சை உணவை ஏற்கவேண்டும். நின்றுகொண்டுதான் உண்ண வேண்டும். அமர்ந்து உண்ணக் கூடாது. உண்ணும்போது