பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

பேச்சு வழக்கினைத் தன் அடிப்படையாக ஆக்கிக் கொண்ட காரணத்தால்தான் தமிழிலக்கணம் இன்றுவரை கட்டுடை படாமல் தன்னைக் காத்துக்கொண்டிருக்கிறது; உயிர்ப்பாற்றல் மிக்கதாக விளங்குகிறது.

வாய்மையும் கடவுளும்

பன்னூறாண்டுகளாக நமது சமுதாயத்தில் கடுமையான குற்றங்களாக மக்களால் கருதப்பட்டு விலக்கப்படுவன பொய், களவு, கொலை, காமம், கள் ஆகிய ஐந்துமே. இவை குற்றங்களாக மட்டுமல்லாமல் 'பாவங்களாகவும்’ கருதப்பட்டுள்ளன. வடமொழியாளர் இவற்றை 'மாபாதகம்' என்றே குறிக்கின்றனர். இந்த ஐவகைத் தவறுகளையும் தொகுத்துச் சொல்லும் வழக்கம் வேதங்களிலும் உபநிடதங்களிலும் இல்லை. இந்த ஐந்து வகையான செயல்களும் கடியப்பட்டு, இவற்றுக்கு எதிரானவை தொகுப்பு அறமாகக் கொள்ளப்பட்டமை சமண மதத்தின் செல்வாக்கினால் ஆகும். நல்ல அறிவைவிட நல்ல ஒழுக்கமே சமணர்களால் பெரிதும் போற்றப்பட்டது என்பதே இதற்குக் காரணமாகும்.

இந்த ஐந்து ஒழுக்கங்களில் கள் விலக்குவதைத் தவிர்த்த ஏனைய நான்கும் இன்றளவும் அடித்தளத்து மக்களால் விலக்கிப் போற்றப்படுகின்றன. இந்த அறங்களே 'சமூக மதிப்பீடுகள்’ என்பதாகக் காலப்போக்கில் வளர்ந்து நிற்கின்றன.

வாய்மை அல்லது மெய்ம்மை என்பது தமிழ்ச் சமூக மதிப்பீடுகளில் ஒன்றாகும். சமூக வாழ்வில் இந்த மதிப்பீடு பிற மதிப்பீடுகளைவிடப் பேரழுத்தம் பெற்று விளங்குகிறது. நடைமுறையில் வாய்மை என்பது உண்மையைப் பேசுதல், சொன்ன சொல்லை என்ன விலை கொடுத்தேனும் காப்பாற்றுதல் என இரண்டு வகையாக அமைகிறது.

தமிழரால் பெரிதும் மதிக்கப்பெறும் திருக்குறள், 'உண்மை பேசுதல்’ என்பதைப் பலபட விரித்தும் சிறப்பித்தும் பேசுகிறது. நல்லன சொல்லுவது, நன்மை விளையுமாறு சொல்லுவது என்று உடன்பாட்டால் இந்த அறத்தை விளக்குகிறார் திருவள்ளுவர்.