பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அண்மையில் படித்த இரண்டு செய்திகளை முதலில் சொல்லியாக வேண்டும். அமெரிக்க நிறுவனம் ஒன்றின் அறிக்கை, இந்தியா போன்ற வளரும் நாடுகள் வேதி உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் "உலகில் மாசுப் பெருக்கத்துக்கான பெருங்கரணங்களில் ஒன்றாகிவிட்டது' என்று குற்றம் சாட்டியிருந்தது. மற்றொருபுறத்தில், தமிழக வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர், 'இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு நமது நிலங்கள் ஏற்புடையதாக இல்லை. இயற்கை உரங்களைக்கொண்டு நிலத்தை மீண்டும் நாம் செழுமையாக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 1960களின் தொடக்கப் பகுதியில் நான் சிறுவனாக இருந்த போது நெடுஞ்சாலை ஓரத்து நன்செய் வயல்களில் 'நவீன உர நிரூபண வயல்' என்றெழுதி நடப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் நினைவுக்கு வந்தன. உயிரியல் தொழில் நுட்பத்தை எதிர்த்து வேளாண் அறிஞர் வந்தனா சிவா அண்மையில் எழுதிய புத்தகமும் என் நினைவுக்கு வந்தது.

நாற்பதாண்டுக் காலத்தில் இயற்கை நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கிவிட்டது என்றுதானே இதற்குப் பொருள்? 'உள்ளது சிறத்தல்' எனும் உயிரியல் கோட்பாட்டில் 'காலம்' பெற்றுள்ள இடத்தை புரிந்துகொள்ளத் தவறிவிட்டோமோ? 'இயற்கையோடியைந்த இன்பம் இன்பத்தோடியைந்த வாழ்வு' என்று பாடிய சுந்தரரும் திரு.வி.க.வும் இப்போது பெரியாரைப் போல நமது மறுவாசிப்புக்கு உரியவர்களாகிவிட்டார்கள்.

பயிர்த்துறையில் நடந்த மாற்றங்கள், பண்பாட்டுத் துறையிலும் நடந்தேறியுள்ளன. வேதி உரங்கள் ‘விஞ்ஞான’ப் போர்வையில் உருவாக்கிய எதிர்விளைவுகளை, பண்பாட்டுத் தளத்தில் தகவல் தொடர்புச் சாதனங்கள், பன்னாட்டு மூலதன உதவியுடன் உருவாக்கிவிட்டன. 14 செ.மீ. திரைப் பெட்டி, கிரிக்கெட் என்னும் இரண்டு நோய்கள் நம்முடைய 'கொழுந்து'களைத் தாக்கத் தொடங்கியுள்ளன. “வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமாறுபோல” என்பது வைணவ உரை நயம். வேர்களைப் பற்றிய