பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மணமேடையில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நெல் நிறைநாழி வெற்றிலை பாக்கு, சந்தனம் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. முதல் நாள் பார்ப்பனப் புரோகிதர் அமர்ந்திருந்த இடத்தில் குடிமகன் அமர்ந்துகொண்டார். அவர் தலைமையில் மண மக்கள் சில சடங்குகளைச் செய்தனர். மணமகன் கையில் அவர் கொடுக்கும் குழந்தைப் பொம்மையை, அவன் மணமகள் கையில் கொடுத்தான். அதன் பின்னர் மணமக்களுக்குத் திருமண நாளில் பார்ப்பனப் புரோகிதர் கட்டிய காப்புக் கயிற்றை அறுத்தார். பின்னர் தனக்குரிய மரியாதைகளுடன் காணிக்கை பெற்றுக்கொண்டார்.

மணமேடையில் ஏறிக் காப்பறுக்கும் உரிமைபெற்ற குடிமகனே ஒரு காலத்தில் காப்புக் கட்டும் உரிமையினையும் பெற்றிருக்க வேண்டும் என்பதை இந்தச் சடங்கிலிருந்து அறியலாம். காப்புக் கட்டும் உரிமையினைப் பார்ப்பனர்களிடம் இழந்துவிட்டு, காப்பினை அறுக்கும் உரிமையினை மட்டும் அவரது சாதி தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவாகவே திருமணம் நடைபெறும் பொழுது பந்தற்காலைப் பிடித்துக்கொண்டு முன்னிலை வகிக்கும் உரிமை அவருக்குத் தரப்பட்டுள்ளது. "குடிமகன் பந்தக்காலைப் பிடிக்காமல் திருமணம் நடைபெறாது' என்று ஒரு தகவலாளி குறிப்பிடுகிறார். மேற்குறிப்பிட்ட சாதியாரின் இழவுச் சடங்குகளையும் குடிமகனே நடத்திவைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இதைப்போன்றே வேறு சில சாதிகட்குப் பண்டாரமும், வள்ளுவரும், வேளாரும், பறையரும் சடங்கில் தலைமை ஏற்கின்றனர் என்பது கள ஆய்விலிருந்து தெரியவருகிறது.

இசுலாமியப் பாணர்

ஒல்லியான உருவம். முழங்காலுக்குக் கீழே தொங்கும் வெள்ளை ஜிப்பா. வேட்டிக்குப் பதிலாகக் ‘கைலி’ எனப்படும் 'சாரம்', முக்கோண வடிவில் மடித்து இரண்டு தோளிலுமாகத் தொங்கும் துண்டு. தலையிலே பெரிய பச்சைத் தலைப்பாகை. கழுத்தில் நெல்லிக்காய் அளவிலான மணிகள் கோத்த குறுமத்தங்காய் மாலை