உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அசெட்டோஃபீனோன்‌ 165

தோற்றுவிக்கிறது. இதிலிருந்து யூரிக்‌ அமிலத்தைப்‌ (uric acid) பெறலாம்‌.

டி. வி. கி.

நூலோதி

Finar I.L., Organic Chemistry Vol. I. Sixth Edition, ELBS. London. 1973.

அசெட்டோஃபீனோன்‌ (C₆H₅COCH₃)

இது ஃபினைல்‌ மெதில்‌ கீட்டோன்‌ (phenyl methyl ketone), ஹைப்னோன்‌ (hypnone), அசெட்டைல்‌ பென்‌சீன்‌ (acetylbenzene) எனவும்‌ அழைக்கப்படுகிறது. அசெட்டோஃபீனோன்‌ (acetophenone) ஒரு நிறமற்ற நீர்மம்‌. நெடியும்‌ இனிய மணமும்‌, சுவையும்‌ கொண்டது. இதன்‌ கொதி நிலை 201.7°C. எளிதில்‌ தீப்‌பற்றிக்‌ கொள்ளும்‌ தன்மையுடையது. இது நீரில்‌ மிதமாகவும்‌, கரிமக்‌ கரைப்பான்களிலும்‌ சல்‌ஃப்யூரிக்‌ அமிலத்‌திலும்‌ மிகுதியாகவும்‌ கரையும்‌. இது பென்சீனும்‌ அசெட்டிக்‌ நீரிலியும் (acetic anhydride) அல்லது அசெட்டைல்‌ குளோரைடும்‌ சேரும்‌ ஃபிரிடல்‌ கிராஃப்ட்ஸ்‌ (Friedel-Crafts) வினை மூலம் கிடைக்கிறது. நறுஞ்சுவையூட்டும்‌ பொருளாகவும்‌ நல்ல மணம்‌ உண்‌டாக்கும்‌ பொருளாகவும்‌ பயன்படுகிறது. மருந்துகள்‌, ரெசின்கள்‌ மற்றும்‌ பல கரிமப்‌ பொருட்கள்‌ தயாரிக்கும்‌ முறைகளிலும்‌ இது இடைநிலைப்‌ பொருளாகப்‌ (intermediate) பயன்படுகிறது.

நூலோதி

1. Hawley, Gessner, G., The Condensed Chemical Dictionary, Tenth Edn. Galgotia Book Source Publishers. New Delhi. 1984.

2. Finar, I.L., Organic Chemistry, Vol. I. Sixth Edn. ELBS, London 1973.

அசெட்டோ நைட்ரைல்‌ (H₃C CN)

இது மெதில் சயனைடு (methyl cyanide) என்றும் அழைக்கப்படுகிறது. அசெட்டோ நைட்ரைல்‌ (acetonitrile) ஒரு நிறமற்ற, அரோமேட்டிக்‌ நெடி கொண்ட தெளிவான நீர்மம்‌. இதன்‌ கொதிநிலை 82°C. நீரிலும்‌, ஆல்கஹாலிலும்‌ கரையும்‌ தன்மையுள்ளது. இதன்‌ மின்தகை எண்‌ (dielectric constant) அதிகமாகும்‌. இதன்‌ முனைவும்‌ (polarity) அதிகமாகும்‌. வேகமாக வினைபுரியக்‌ கூடியது. புரோப்பிலினையும்‌ அம்மோனியாவையும்‌ பயன்படுத்தி அக்ரிலோ நைட்ரைல்‌ (acrylonitrile) தயாரிக்கும்‌ போது அசெட்டோ நைட்ரைல்‌ துணைப்பொருளாகக்‌ (by-product) கிடைக்கிறது. இது எளிதில்‌ தீப்பற்றிக்‌ கொள்ளும்‌; மிதமான நஞ்சாகும்‌ (moderately toxic). அசெட்டோ நைட்ரைலானது ஹைட்ரோகார்பன்களை, சிறப்பாக பியூட்டாடையினைப்‌ (butadiene) பிரித்தெடுக்கும்‌ வினையில்‌ கரைப்‌ பானாகவும்‌ (solvent) இடைநிலைப்‌ பொருளாகவும்‌ (intermediate), தாவர எண்‌ணெய்களிலிருந்து (vegetable oil) கொழுப்பு எண்ணெய்களைப்‌ பிரித்‌தெடுக்கும்‌ தொழிலிலும்‌, பல செயற்கை மருந்துகள்‌ தயாரிப்பிலும்‌ பயன்படுகிறது.

நூலோதி

1. Hawley, Gessner,G., The Condensed Chemical Dictionary, 10th Edition, 1984

2. Finar I.L., Organic Chemistry, Vol. I, Sixth Edition, ELBS. London, 1973.

அசெட்டோன்‌ (CH₃)₂CO

இது நிறமற்ற, இனிய மணமுள்ள நீர்மம்‌, இதன்‌ கொதிநிலை 56°C. உருகு நிலை - 94.8°C. இது நீர்‌, ஆல்கஹால்‌, ஈதர்‌ முதலிய கரைப்பான்களில்‌ மிக எளிதில்‌ கரையும்‌. பல்வேறுவிதமான வேதிப்பொருள்‌கள்‌ தயாரிக்க அசெட்டோன்‌ (acetone) மிகவும்‌ இன்றியமையாத மூலப்‌ பொருளாக விளங்குகிறது.

இது செலுலோஸ்‌ ஈதர்கள்‌ (cellulose ethers), செலுலோஸ்‌ அசெட்டேட்‌ (cellulose acetate), செலுலோஸ்‌ நைட்ரேட்‌ (cellulose nitrate), செலுலோஸ்‌ எஸ்டர்கள்‌ (cellulose esters) ஆகியவைகளைக்‌ கரைப்பதற்குப்‌ பயன்படும்‌ கரைப்பான்‌ ஆகும்‌. செலுலோஸ்‌ அசெட்‌டேட்டை இழையாக நூற்க அசெட்டோன்‌ ஒரு கரைப்‌பானாகப்‌ பயன்படுகிறது. செலுலோஸ்‌ எஸ்டர்களை அடிப்படையாகக்‌ கொண்டு தயாரிக்கப்படும்‌ மெருகுப்‌ பூச்சுகள்‌ அசெட்டோன்‌ போன்ற கரைப்பான்கள்‌ பல கலந்த கரைப்பான்களில்‌ கரைக்கப்படுகின்றன. மேலும்‌ அசெட்டிலீன்‌ வளிமத்தைச்‌ சேமித்து வைப்பதற்கு அசெட்டோன்‌ பெரிதும்‌ பயன்படுகிறது. இது எவ்வாறு எனில்‌, வேதிவினைக்குள்ளாகாத கல்நார்த் (asbestos)