பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அறிவியல் திருவள்ளுவம்

நோய் மாந்தர்க்கு உடலிலும் அமையும். உள்ளத்திலும் அமையும். அது மாந்தர்க்குப் பெருமளவில் உடன்பிறப்பு. ‘கருவிலே திருவுடைமை' என்பது போன்று 'கருவிலே நோயுடைமை'யும் உள்ளது. இக்குழந்தைக்கு கருவிலேயே நோய்க்கூறு அமைந்தது 'என்று இக்கால மருத்துவர் அறிந்து கூறுவர். இன்னும் ஆழமாக நோக்கினால் கருப்பைக்குள் இருக்கும் குழந்தையை ஆய்ந்து அதன் நோயைக் கணிக்கும் காலம் இது. மாந்தன் தோன்றிய காலத்திலேயே அவனுடன் நோயும் தோன்றியதாம். தோற்ற கால மாந்தனின் படிவங்கள் கிடைத்தவற்றில் நோய்க்குறிகள் தென்பட்டமை காணப்பட்டுள்ளது. எகிப்தியப் படிவங்களில் இக்கால் நோயின் குறிகள் காணப்பட்டன. எனவே, நோய் மாந்தனுக்கு உடன்பிறப்பு, அதனால்தான் "உடன் பிறந்தே சொல்லும் வியாதி" என்றனர். நோய் இடம் பிடிக்க உடலில் இடந்தேடி அமைவது அதனால்தான் நோய்க்கு இடம் கொடேல் என்றார் அவ்வையார்.

நோய் உடலை நோக வைப்பது. 'நொ’ என்றால் ’துன்பப்படு' என்று பொருள். இதுதான் 'நோய்’ என்று வடிவெடுத்தது. இடம் பிடித்து உடலில் நின்று துன்பம் தரும். துன்பம் தரும் எத்தாக்கத்தையும் நோய் என்னும் சொல்லால் குறிக்கின்றோம். இந்நோயே உடலை இறுகப் பற்றிப் பிணித்துக் கொண்டு விலகாமல் அடம்பிடிக்குமானால் அது 'பிணி' எனப்படும். பிணித்து நிற்கும் நோய் பிணி. இது கடுமையானது; கொடுமையானது. இஃது இல்லாமை நாட்டுக்கு ஒர் அணி. இப்பிணியிலும் உடலைப் பற்றிப் பிணித்துக் கொண்டு நீங்காமல் தொடர்ந்து துன்பம் தருவன பல உள்ளன. நீரிழிவு, என்புருக்கி, நரம்பிமுப்பு முதலியன நெடுங்காலம் உறவாடித் துன்புறுத்துவன: இவற்றைத் திருவள்ளுவர் "ஓவாப் பிணி' (734) என்றார். பிணிக்கும் நோய் இல்லாது நலத்துடன் வாழ்வதற்கென்றே திருவள்ளுவர் 'மருந்து' என்னும் ஓர் அதிகாரம் வகுத்து