பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அறிவியல் திருவள்ளுவம்

ஆ. செல்வம்

'பிணியின்மை'யை அடுத்துத் திருவள்ளுவரால் குறிக்கப்பட்டது "செல்வம்".

'செல்வம்' என்றால் என்ன? 'செல்வம்' என்று எதனைச் சொல்கின்றோம்? பல பொருள்களையும் 'செல்வம்' என்று கொள்கின்றோம்.

நிலத்திலும் கடலிலும், மலையிலும் முறையே: இயற்கையாகக் கிடைக்கும் பொன், கரி, தனிமம் முதலியவற்றையும், முத்து, பவளம், உப்பு முதலியவற்றையும், மணி, கல், மரம் முதலியவற்றையும் செல்வமாகக் கொள்கின்றோம்.

மாந்தரால் செயற்கையில் உருவாக்கப்படும் வயல் வீடு, பொறிகள், பண்டங்கள் முதலியனவும் செல்வம். உழைப்பில் விளையும் நெல், பருப்பு, எண்ணெய் முதலியனவும் செல்வம். இவை அனைத்தும் கண்ணால் காணப்படும் பொருள்கள். எனவே, செல்வம் என்பதைப் பொருள் என்றும் சொல்லலாம்.

திருவள்ளுவர் "செல்வம் செயற்கு" (375) என்று செல்வம் என்னும் சொல்லாலும் குறித்தார். "தாளாற்றித் தந்த பொருள் எல்லாம்(212) என்று பொருள் என்னும் சொல்லாலும் குறித்தார். செல்வத்தை ஈட்டுவதைப் 'பொருள் செயல்வகை' என்று குறித்தார். இரண்டையும் கொண்டாலும் 'செல்வம்' என்பதை கொண்டு அதற்கு அடைமொழியாகப் 'பொருள்' என்பதை வைத்து "பொருட் செல்வம்" (241) என்றார்.