பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


அகிலத்தைப்பற்றி (Universe) பூரண அறிவைத் தருவது இந்தத் தத்துவம்.

சாங்கியம் இந்த அகிலத்திற்கு மூலப் பொருள் இரண்டு என்று பேசும். அவற்றுள், ஒன்று, அறிவு சொரூபமானது. அது புருடன் (Soul)[1] மற்றது, அறிவற்றது. அது பிரகிருதி. இவை இரண்டும் என்றும் உள்ள தத்துவங்கள் (மெய்ப்பொருள்கள்). இவற்றை யாரும் உண்டாக்கவில்லை. மூலப்பகுதி (பிரகிருதி) என்ற விதைத் தத்துவத்தினின்றுதான் இவ்வுலகப் பொருள்கள் உண்டாயின. பின்பு அவை அழிந்துபோய் சேரும் இடமும் பிரகிருதியே. புருடன் என்னும் அறிவுடைய பொருள் மாற்றம் அடையாதது. புருடன் உலகத்தோற்றத்திற்குக் காரணமும் அன்று; காரியமும் அன்று. பிரகிருதியே இந்த அகிலத் தோற்றத்திற்கான காரணம் (மூலப்பொருள்). இவ்விரு மூலப்பொருள்களின் அடிப்படையில்தான் இந்த அகிலத்திற்கும் அதில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் விளக்கம் தருகின்றது, சாங்கியம்.

புருடன் - ஆன்மா - பல என்ற கருத்தையுடையது, சாங்கியம். ஆன்மா ஒன்றேயானால் இறப்பு என ஒன்று வரும்போது யாவரும் ஒரே நேரத்தில் இறக்க வேண்டும். அப்படி ஒன்றும் நிகழாததிலிருந்து ஆன்மா பல என்ற முடிவுக்கு வந்தனர், சாங்கியர். சாங்கியம் வேதத்தை ஏற்றாலும் கடவுள் என்று ஒன்று இல்லை என்ற கருத்தையுடையது. பிரகிருதிதானே இயங்கவல்லது என்பது இதன் கொள்கை. இச்சமயத் தத்துவக் கணக்குப்படி மொத்தம் 25 தத்துவங்கள்தாம் உலகப் பொருள்கள் யாவற்றிற்கும் அடிப்படை.

(ii) யோகம் : சாங்கியத்துடன் ஒன்றெனக் கருதக்கூடியது இத்தத்துவம். சாங்கியத்தின் பெரும்பாலான கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொண்டது. பிரகிருதி, புருடன் என்ற இருதத்துவங்களுடன் கடவுள் (ஈசுவரன்) என்ற மூன்றாவது தத்துவத்தையும் கொண்டது யோக தரிசனம்[2] இறைவன் என்றும் உள்ளவன்; படைப்பிற்கு உதவுபவனேயன்றி முக்தியைக்


  1. சாங்கியரது பிரகிருதியும் புருடனும் சமணர் கூறும் அசீவன், சீவன் என்ற கருத்தை நினைவுகூரச் செய்கின்றன.
  2. இந்தக் கருத்தினால் இத்தரிசனம் சாங்கியத்தினின்றும் மாறுபட்டது.