பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருச்சிற்றம்பலம்
மு க வு ரை

1909ஆம் ஆண்டில் சொக்கநாதரது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை அறுபத்து நான்கு வகையான விருத்தப்பாக்களிற் பாடி மகிழும் பேற்றினைப் பெற்ற எனக்கு அறுபத்து மூன்று நாயன்மார்களின் சரிதக் குறிப்பை அறுபத்து மூன்று வகையான பாக்களிற் பாடும் பேறு இப்போதுதான் என் இளவலின் தூண்டுதலினாற் கிடைத்தது. 1909 ஆம் ஆண்டில் ஆண்டவன் புகழை ஒதிய அடியேற்கு அடியவர் புகழை ஒத இடையில் 41-ஆண்டுகள் சென்றுவிட்டனவே என்னும் வருத்தம் ஒரு பாலும், இப்போதேனும் எனதன்பிற்குரியவர் மூலமாக, இவ்வாய்ப்பு கிடைத்ததே என்னும் மகிழ்ச்சி ஒருபாலும் விளைகின்றன.

அடியார் பெருமையை-"விண்டொழிந்தன நம்முடை மேல்வினை.... தொண்டரோ டினிதிருந் தமையாலே" எனச் சம்பந்தரும், "உய்யப் போந்தேனுக்கும் உண்டு" கொலோ★★★ ஆரூர்த் திரு மூலட்டானலுக்குப் பொய்யன்பிலா அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே" என அப்பரும், "அடியார்க்கும் அடியேன்"-எனத் திருத்தொண்டத் தொகையிற் சுந்தரரும், அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங்