பக்கம்:அலிபாபாவும் 40 திருடர்களும்.djvu/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

கிறான் அமீர்! மார்ஜியானா தன் சாகஸ நடிப்பினால், அலிபாபாவை தன்கையிலேயே நடனமாடிக் கொல்வதற்கு அனுமதி பெற்று, நடனமாடிய படி தன் கையிலிருந்த கத்தியால் அவன் கட்டுகளை அறுத்து விட்டு விடுகிறாள்.

கட்டறுபட்ட அலிபாபா அங்கிருந்த வீரர்களுடன் கத்திச்சண்டையிடும்பொழுது, அமீர்காசீம்கான், கள்வர் குகையை நோக்கி விரைகிறான். அங்கிருந்த பொற்குவியல் அவன் அறிவை திக்குமுக்கலாடச் செய்கிறது. ஏராளமான பொன்னையும் மணியையும், வாரி மூட்டை கட்டிக் கொண்டு புறப்படுகிறான்! அந்தச் சமயத்தில் கதவைத் திறக்கச் செய்யும் "மாய வார்த்தை" அவனுக்கு மறந்து விடுகிறது. செய்வதறியாமல் புலம்பித் தவிக்கிறான். அதற்குள் அபுஹுசேன் திரும்பி வந்துவிடுகிறான். கள்வர் குகையில் கன்னமிட வந்த காசீம்கான் சிரச்சேதம் செய்யப்படுகிறான். அவனது முண்டத்தை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு விட்டு திருடர் கூட்டம் வெளியே செல்கிறது.

தப்பிச் சென்ற அமீர்காசீம்கானைத் தேடி, அலிபாபா திருடர் குகைக்கு வருகிறான். அங்கிருந்த முண்டத்தையும், தலையையும், தன் வீட்டுக்குத் தூக்கிச் செல்கிறான். குலாம் என்ற சக்கிலியனை கண்ணைக் கட்டி அழைத்து வந்து, அமீரின் பிணத்தை ஒன்றாக தைக்கச் செய்து, அடக்கம் செய்கிறார்கள்.

குகைக்குத் திரும்பிய அபுஹுசேன், காசீம்கானின் சவத்தைக் காணாமல் ஆத்திரம் அடைகிறான். குலாமைப் பிடித்துவந்து மிரட்டி, அலிபாபாதான் அப்படிச் செய்திருப்பான் என புரிந்துகொள்கிறான். அலிபாபாவை நயவஞ்சகமாகக் கொலை செய்து பழி தீர்க்க முடிவு செய் கிறான் அபுஹுசேன். ஒரு பாரசீக எண்ணெய் வியாபாரி போல வேஷம் போட்டுக் கொண்டு, தன் சகாக்கள் முப்பத்தொன்பது பேரையும்முப்பத் தொன்பது பீப்பாய்களில் மறைவாக பதுங்கி இருக்கச் செய்து, அலிபாபாவின் வீட்டை அடைகிறான். விருந்தினரை உபசரிக்கும் பண்புள்ள அலிபாபா அபுஹுசேனையும், அவன் கொண்டுவந்த பீப்பாய்களையும், தன் மாளிகைக்குள் அனுமதிக்கிறான்.

மாறு வேஷத்தில் வந்திருக்கும் பாரசீக வியாபாரி, அபுஹுசேன் தான் என அறிந்த மார்ஜியானா, அலிபாபாவை எச்சரிக்கிறாள். அவள் பேச்சை நம்பாமல் அலிபாபா ஆத்திரத்தில் திட்டுகிறான். செய்யும் வகை அறியாமல் தவிக்கிறாள் மார்ஜியானா! இந்தச் சமயத்தில் புலிபோல் பாய்ந்து அவளைச் சிறை செய்கிறான் அபுஹுசேன்!......

மார்ஜியானாவின் கதி என்ன? அலிபாபா, அபுஹுசேனின் சூழ்ச்சி வலையிலிருந்து உயிர் தப்பினானா? ரத்தத்தைக் கொந்தளிக்கச் செய்யும் பிரமிக்கத்தக்க அந்தக் காட்சிகளை வெள்ளித் திரையில் காண்க.