பக்கம்:அலிபாபா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1
விறகுவெட்டியும் நிதிக்குவியலும்


பற்பல ஆண்டுகளுக்கு முன்னால், பாரசிக நாட்டிலே, ஒரு நகரில் இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் மூத்தவன் பெயர் காஸிம். இளையவன் பெயர் அலிபாபா. அவர்களுடைய தந்தை வைத்துச்சென்ற சிறிதளவு சொத்தை அவர்கள் விரைவிலேயே செலவழித்துக் கரைத்து விட்டனர். ஆனால், காஸிம், செல்வம் மிகுந்த ஒரு பெண்ணை மணந்துகொண்டதில், அவனுடைய மாமனார் சொத்துகள் அவனை வந்தடைந்தன. ஒரு பெரிய கடை, ஏராளமான பொருள்கள் நிறைந்த ஒரு கிடங்கு, பூமிக்குள்ளே புதைத்து வைத்திருந்த தங்கம் முதலியவையும் அவனுக்கு உரிமையாயின. அவன் ஒரு கனவான் என்று ஊரெல்லாம் பெயராயிற்று. ஆனால் அலிபாபா, தன்னைப் போன்ற ஏழையான ஒரு பெண்ணை மணந்துகொண்டதால், அவன் ஒரு குடிசையிலேயே வாழ்ந்து வந்தான். ஒவ்வொரு நாளும் அவன் காட்டிற்குச் சென்று, விறகு வெட்டி, அதை விற்று, வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் மூன்று கழுதைகள் இருந்தன. அவைகளின் மீது விறகுக் கட்டுகளை ஏற்றிக்கொண்டு வருவது அவன் வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/7&oldid=509020" இலிருந்து மீள்விக்கப்பட்டது