பக்கம்:அலைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஹுதி O 69


எத்தனையோ முறை அது கண்டிருக்கிறது. தின்றுமிருக்கிறது. அதே மாதிரி வானில் இப்பொழுது பூக்கள் வாரி இறைந்திருந்தன. ஒன்றன் ஒன்று ஒரே அளவில் இரு பறவைகள், கண்ணெதிர் உயரத்தில் பறந்து கொண்டு தம் கூட்டிற்கு விரைந்து கொண்டிருந்தன.

நேரம் ஏறஏற பகலின் சப்தங்கள் ஒவ்வொன்றாய் அடங்கிப் போயின. உட்புலனுக்கு மாத்திரம் புலனாகும் அர்த்தக் கருக்களுடன், இரவின் நாதவடிகள் ஒவ்வொன்றாய் முளைக்க ஆரம்பித்தன. புதர்களில் ஒரு சலசலப்பு. இலைகளின் பெருமூச்சு, திடீரென்று இரவையே இரண்டு துண்டங்களாய் வெட்டி, இரவே கூக்குரலிட்டாற்போல் ஓர் அலறல், "கெக் கெக் கேக் கேகே’’- "கக்கட கக்கட கட கடகட-" மரங்களிலிருந்து ஒரு பறவையின் சமயமற்ற சிரிப்பு. திடுதிடும் திடுதிடும் திடுதிடும்-நீர் வீழ்ச்சியின் ஓங்காரம், பகலில் உள்ளுக்கு வாங்கிக்கொண்ட கொதிப்பைப் பாறைகள் வெளியே கக்க ஆரம்பித்தன. தன்மேல் முலுமுலுமுலுமுலுமுலு என்று ஏதோ ஊர்வது காளைக்கு உணர்ந்தது. அரிப்புத்தாங்க முடியவில்லை. ஊரல் கழுத்தில் ஏறி சாரை சாரையாய் வயிறு வழியிறங்கி, தொடைப் புண்ணுள் நுழைந்து வெடுக்கென பிடுங்கிக் குடைந்தது. அந்த வலியால் துடிக்கக்கூட அதற்கு உரிமையில்லை! பாறைகள் தம் இடுக்கில் இடுக்கி பிடித்துக் கொண்டிருந்தன. காளை ஒருமுறை தன் விழியை உருட்டிப் பார்த்தது. அதன் விழியளவு பெரிய உயிர்கள் ஒழுங்கான அணியில் தன்மேல் மொய்ப்பது வானொளியில் தெரிந்தது.

“ரண ஜன்னியில் உயிர் ஊசலாடுகையில்-பசி, தாகம், வலி முதலிய உணர்ச்சிகள் கூட மரத்தன. அதற்கே, தன் கால்கள் கீழே பாவாது விடுபட்டு, லேசாய், உயர உயரக் காற்றில் மிதந்து செல்வது போல் தோன்றிற்று. தன் மல ஜலத்தில் ஊறியபடி மலையிடுக்கில். பல விதங்களிலும் துன்புற்று இன்னும் உயிரோடு தவிக்கும் தன்னுடலையே அதனின்று ஒதுங்கிதான் பார்ப்பது போலும் தோன்றிற்று.

அ.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/71&oldid=1287260" இலிருந்து மீள்விக்கப்பட்டது