பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

81


சத்தான வித்துக்கள் வேண்டும். வரப்பு வேண்டும். வேலி வேண்டும். உரம் வேண்டும். தினம் தினம் பாதுகாப்பு வேண்டும்.

கெட்ட பண்புகள் என்பவை வயலில் உள்ள களைகள் போல, முள் மரமான காட்டுவேலி மரம் போல. அவைகள் எங்கு வேண்டுமானாலும் முளைக்கும். யார் பாதுகாப்பும் இல்லாமல் பயங்கரமாக வளரும் இவற்றால் மக்களுக்குத் துன்பங்கள் தாம்.

மனிதன் கெட்டவனாக மாறுவதற்கு எந்தத் துணையோ பயிற்சியோ, வழிகாட்டியோ தேவையில்லை. கெட்டவனாக மாறவேண்டும் என்று ஆசைப் பட்டவுடனே, கூப்பிடாமலே ஓடி வந்து குரல் கொடுத்து, கை கொடுத்து, சகலத்தையும் கற்றுத் தந்திட ஒரு கூட்டமே கூடி விடும்.

நல்லவனாக மாற, உனக்குத் சோதனைகள் வரும். வேதனைகள் வரும். ஆனால் ஆதரிக்க யாருமே வரமாட்டார்கள்.

நல்லவர்களாக புகழ்பெறுவது வேறு. கெட்டவர்களாக பெயர் பெறுவது வேறு. இரண்டுக்கும் விளம்பரம் உண்டு. ஆனால் கெட்டவனை முகத்துக்கு நேராகப் பொய்யாய் புகழ்ந்து, அவன் போனதும் காறி உமிழ்வார்கள். முகஸ்துதியான புகழ் என்பது சாப்பாட்டுத் தட்டில் சாணம் படைக்கப்படுவது போல எப்படி வாழ்ந்தாலும் அதற்குப் பெயர் வாழ்க்கையல்ல.

மனிதனாக வாழ்கிறபோது, அதற்குப் பெயர் வாழ்க்கை.

புனிதனாக வாழ்கிறபோது அதற்குப் பெயர் மேல்கை.

கினிதனாக வாழ்கிறபோது அதற்குப் பெயர் கீழ்க்கை.

ஆகவேதான் ஒருவன் மேல்கையில் வாழ்கிற வாழ்வைப் பெற வேண்டும். அந்த வாழ்க்கைப் பெயர்தான் சொர்க்கம். கீழான வாழ்க்கைக்குரியதற்குப் பெயர் நரகம்