பக்கம்:அவள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268லா. ச. ராமாமிருதம்



கொண்டை போட்டிருந்தமாதிரி கூந்தலின் நிஜம். இப்படியே நடந்து கொண்டேயிருக்கலாமா?

அவர்கள்மேல் இறங்கிய ஏதோ ஒரு அமைதியின் சிறகணைப்பில் இருவரும் பேசவில்லை. ரேணு மெதுவாகத் தான் நடந்தாள், இரு சாரிகளையும் பார்த்துக்கொண்டு. சட்டை உரித்தாற்போன்று உடல்வாகில் அடக்கிய துடிப்பு. புலியின் சோம்பல் நடை. புதிதாகப் பார்ப்பது போலும்? அல்லது கடைசியாகப் பார்ப்பது போலுமா?

எவ்வளவு தூரம் நடந்திருப்போம்? அக்கறையில்லை. ரேணு திடீரென ஒரு வீட்டெதிரே நின்று கதவை மெதுவாக விரல்கணுவால் தட்டினாள். கதவு திறந்தது.

ஒரு கப்பல் பாஸ்கரைப் பார்த்ததும், அந்த ஸ்திரீயின் முகம் மாறிற்று.

"நாகம்மா, இவர் தான் என் வீட்டுக்காரர்.”

'வாங்கய்யா, வாங்க. உள்ளே வாங்க-இந்தாங்க, இந்த விசுப் பலகையில் குந்துங்க."

"நாகம்மா, டீ செய்து கொண்டு வா’ ஒரு கீச்சுக் குரல்.

இது யார்?

பாஸ்கர் உத்தரவு வரும் திசையில் திரும்பினார்.

விட்டத்திலிருந்து ஒரு கிளிக்கூண்டு ஊஞ்சலாடிற்று. அதன்மேல் துணி மூடியிருந்தது. பாஸ்கருக்கு சிரிப்பு வந்துவிட்டது. நாகம்மா சமையலறைக்குள் சென்றாள். இரண்டு வினாடிகளுக்கெல்லாம் சமையலறையிலிருந்து ஒரு மின்னல் சுடர் பாய்ந்து வந்து ரேணுவைக் கட்டிக் கொண்டது. -

'இது லல்லி. இவருக்கு நமஸ்தே சொல்லு. எனக்கு. நாகம்மாதான் பிரசவம் பார்த்தாள்.'"

தோற்றுப்போயிருந்த மின்சாரம் அப்பொழுதான் மீண்டது. விசிறி சுழலத் தலைப்பட்டு, பாஸ்கர் நெற்றி வேர்வையை ஒற்றிற்று. உள்ளேயே கொஞ்சம் புழுக்கம் தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/312&oldid=1497862" இலிருந்து மீள்விக்கப்பட்டது