பக்கம்:அவள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298 லா. ச. ராமாமிருதம்

களில் ஒரு தனி குறுகுறுப்பு. ஆரோக்கியவதி. அவளுடைய சால்வார்கம்மீசுக்கு இங்கே ஏகப்பட்ட புருவங்கள் தூக்கியாச்சு. கிசுமுசு. ஆனால் அவள் Don't care master. நானும் ஒரு Don't care master தான். அதாவது என்னை யார் care பண்றா. அதனாலேயே எங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டுப் போச்சு. பின்னே பொழுதுதான் எப்படிப் போவது?

இவ்வளவு சொல்றேனேயொழிய நாங்கள் ஒருவரை ஒருவர் தொட்டது இல்லை. வரம்பு மீறிப் பேசிக் கொண்டதுமில்லை. சத்தியமா நம்பினாநம்பு, நம்பாட்டி போ: ஆணா நீ நம்பாவிட்டால் யார் நம்பப்போறா? அநேகமா நாங்க துளசிப்புதர் சந்நிதானத்தில்தானே சத்திக்கிறோம். திருட்டுத்தனம் இருக்கத்தான் இருக்கு. தெரிஞ்சால் நம்பாத்தில் என்னைப் பொசுக்கி எடுத்துட மாட்டாளா? ஆனால் காதலின் அடையாளமே ருசியே, அதன் திருட்டுத்தனம்தானே.

இங்கே ஒருநாள் நான் தனியாக உட்கார்ந்திருந்த போது உலாவ வந்தவள், என்னோடு அவள் தான் முதலில் பேச்சுத் தொடுத்தாள். துளசி பற்றி ஏதோ கேட்டாள். பறித்துக் கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டாள். ஒரு மாதிரி ஸ்ட்ராங்கா நல்லா இருக்குதே என்று மகிழ்ந்தாள். ஒருவரைப்பற்றி ஒருவர் விசாரணையில் பேச்சு சும்மா மிதந்துகொண்டே சென்றது. என்னவோ மெட்டு முனகினாள். உடனேயே நான் கேட்காமலே அவளிடமிருந்து பாட்டு புறப்பட்டது. உனக்காகப் பாடினாள் என்றே நான் இப்போது கூறுவேன்.

அப்பா! என்ன குரல் கொஞ்சம் புருஷ சாரீரம்தான். நெருப்புப் பிழம்பாகி அதன் இனிமை வழிந்து என்னை எரித்தது. என் இதயத்துள் வழிந்து அங்கேயே குளிர்ந்து இறுகிப்போனது. ஹிந்துஸ்த்தானி சங்கீதம் கற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/342&oldid=1497828" இலிருந்து மீள்விக்கப்பட்டது