பக்கம்:அவள்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல் 505

ததும்புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது.

"என்னடி குட்டி, இப்போ என்ன விசேஷம்?"

எனக்கே தெரிந்தால் தானே? உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப் போச்சு. கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிகிறது. அன்புடன் அம்மா முகத்தில் புன்னகை தவழ்கின்றது. என் கன்னத்தைத் தடவிவிட்டு இருவரும் மேலே நடந்து செல்கிறார்கள். அம்மா தாழ்ந்த குரலில் அப்பாவிடம் சொல்லிக் கொள்கிறார்:

"பரவாயில்லை பெண்ணைப் பெரியவா சின்னவா மரியாதை தெரிஞ்சு வளர்த்திருக்கா.'

அதனால் ஒன்றுமில்லை. என்னவோ எனக்குத் தோன்றிற்று, அவ்வளவுதான். இந்தச் சமயத்தில் இவர்களை நான் நமஸ்கரித்ததால், மேலிருந்து இவர்கள் பெற்று வந்த அருளில் கொஞ்சம் ஸ்வீகரித்துக் கொள்கிறேன். சந்ததியிலிருந்து சந்ததிக்கு இறங்கி வரும் பரம்பரை அருள்.

எங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளி ஆன பிறகு மாடிக்குப் போன அம்மா, வழக்கத்தைவிடச் சுருக்கவே திரும்பி வருகிறார். சமாசாரம் தந்தி பறக்கிறது. 'பாட்டி கீழே வர ஆசைப்படுகிறார்." அப்பாவும் அம்மாவும் மேலேறிச் செல்கிறார்கள், நாங்கள் எல்லோரும் சொர்க்கவா ச ல் தரிசனத்திற்குக் காத்திருப்பது போல் பயபக்தியுடன் மெளனமாய்க் காத்திருக்கிறோம். சட்டென நினைப்பு வந்தவனாய் ஒரு கொள்ளுப்பேர வாண்டு ஸ்டூலை வைத்து மேலேறி, மாடி விளக்கின் ஸ்விட்சைப் போடுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/549&oldid=1497350" இலிருந்து மீள்விக்கப்பட்டது