பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


ஆண்மையின் சீற்றத்தோடு வண்டியை நிறுத்தினாள், டாக்டர் ரேவதி. எதிரே நின்ற கருப்பு நிற வாடகைக் காரின் எண்களைக் கண்டதும் அவள் பிரமித்தாள். அன்றொரு நாள் ஞானசீலன் குடிபோதையில் விபத்துக்கு ஆளாகத் துாண்டியதே. அதே கருப்பு டாக்சிதான், இது! சந்தேகம் இல்லை.

வாட்டசாட்டமான முகமூடிக் கொள்ளைக்காரன் ஒருவன் மட்டும் காரிலிருந்து குதித்து வந்து நின்றான். "டாக்டரம்மா, நீங்கள் கழுத்திலே போட்டிருக்கிறது தாலியானால் எனக்கு வேண்டாம். வெறும் தங்கச் சங்கிலியாக இருந்தால் அதை என்கிட்ட கழற்றிக் கொடுத்திட்டு, மரியாதையாக உங்க மானத்தையும் உசிரையும் காப்பாற்றிக்கினு மூச்சுக் காட்டாமல் திரும்புங்க!” என்று கட்டளை பிறப்பித்தான்.

“என் கழுத்திலே கிடக்கிறது வெறும் சங்கிலிதான். அதை உன் கையில கழற்றித் தர மறுத்தால், நீ என்ன செய்வாய்?" என்று ரோஷத்தோடு சீறினாள், ரேவதி.

"என்ன செய்வேனா?” என்று கொக்கரித்தவனாக, கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து நீட்டினான், அவன்.