பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அவள் விழித்திருந்தாள்

தண்ணீரைப் பார்த்ததும் நினைத்துக் கொண்டாள் நர்மதா. கிணற்றிலிருந்து இரைத்துக் கொட்டினால் உள்ளே தொட்டியில் குபு குபுவென்று ஜலம் விழும்படி கட்டி இருந்தார்கள். பட்டப்பா உள்ளே இருந்து "பாரின் சோப்புக்கட்டி ஒன்று எடுத்து வந்தான். ரேழியிலேயே அந்தச் சோப்பு கம் மென்று மணந்தது இந்தா என்று கொடுத்தான். அவளுக்கு லஜ்ஜையாக இருந்தது.விரல்கள் அவன் கையை வருடுதிற மாதிரி சோப்பை வாங்கிக்கொண்டாள். “மஞ்சள் பூசிக்கிற வழக்கம் உண்டா” என்று கேட்டான்.

அவள் தலையை ஆட்டியவுடன் உள்ளேயிருந்து ஒரு டப்பா நிறைய கஸ்துாரி மஞ்சள் பொடியை எடுத்துக்கொண்டு வந்தான். “பட்டணத்துலே கந்தசாமி கோயில் கிட்டே வாங்கினது. தண்ணி போறுமா இல்லை இன்னும் இரண்டு வாளி இரைச்சு ஊத்தட்டுமா” என்று கேட்டான்.

அவளுக்கு உடம்பை என்னவோ செய்தது. தண்ணி வரும் அந்த இடுக்கு வழியாக அவன் அவள் குளிக்கிறதைப் பார்க்க ஆசைப்படறான் போல இருக்கு... என்று நினைத்துக் கொண்டாள்.

“வாண்டாம்...நிறைய தண்ணி இருக்கு”

அவள் உள்ளேபோய் கொஞ்சம் கொஞ்சமாகக் கதவைச் சாத்திய படி கதவின் இடைவெளி வழியாக அவனைப் பார்த்தாள்.

உஹும். ஒரு வேலைக்காரன்-இல்லை ஒரு வேலைக்காரி கேட்கிற மாதிரி தண்ணிவேணுமா, மஞ்சள் வேணுமா என்று கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டான். sa

வெற்று உடம்பில் சோப்பைக் குழைத்துப் பூசி நுரை வழியும் தன் உடம்பிலே லயித்துப்போனாள். அப்படியொரு நிறம். செந்தாழைபோல ஒரு மஞ்சள் மினுமினுப்பு. வெறும் பழயதுக்கும், எரிச்சக்குழம்புக்குமே இப்படி ஒரு மினுமினுப்பு படர்ந்து கிடந்தது.

தலையைச்சுற்றித் துண்டைக்கட்டிக்கொண்டு, புடவையைச் சுற்றியபடி உள்ளே வந்தாள். கங்கம்மா அவள் கால்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். வாழை மரத்தின் அடித்தண்டுபோல் உறுதியாக, வாளிப்பாக இருந்தன. கல்யாணத்தில் இட்டிருந்த நலங்குப்பூச்சு லேசாகக் கலைந்திருந்தது.