16
அவள் விழித்திருந்தாள்
கூடம் பூராவும் பூ மணந்தது. தட்டு நிறைய ஜாதி மல்லிகை அரும்புகளை வைத்துக்கொண்டு நெருக்கமாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள் பக்கத்து வீட்டுப் பூரணி, தூக்கம் கலைந்து எழுந்துவந்த நர்மதாவைப் பார்த்து அவள் விஷமமாகச் சிரித்துக்கொண்டே, “என்ன இன்னிக்கே இப்படிப் பகல்லே தூங்கறே!” என்று கேட்டாள்.
நர்மதாவுக்கும் அவள் கேள்வி புரிந்தது. அவளும் வெட்கத்துடன் சிரித்துவிட்டு கொல்லைப்பக்கம்போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள். லேசாகப்பவுடர் போட்டுக்கொண்டு, குங்குமம் வைத்துக் கொண்டாள்.
“காப்பி சாப்பிட்டுட்டு வா. தலை பின்னி பூ வைக்கிறேன். ராத்திரி அசட்டுப் பிசட்டுன்னு இருக்காதே. உம் .. போ” என்றாள் பூரணி.
“என்னது...” என்றாள் நர்மதா.
“என்னதா? ஒன்றும் தெரியாதமாதிரி”
இருவரும் சேர்ந்தே சிரித்தார்கள். அதற்குள் பூரணியைத் தேடிக்கொண்டு அவள் கணவன் பாலு வந்தான். பகல் சாப்பாட்டுக்கு பாக்டரியிலிந்து லேட்டாக வந்திருக்கிறான். ஆள் நல்ல உயரம். வாட்டசாட்டமான தேகம். அரும்பு மீசை, சுருட்டை கிராப் இத்யாதி.
அவன் மனைவியைப் பார்த்துக்கொண்டே ஒரக்கண்ணால் நர்மதாவை அளந்தான். தலையிலிருந்து படிப்படியாக அவள் பார்வை மார்பில் இறங்கி அங்கே நிலைத்து நின்றது.
பூரணி இதை கவனித்து விட்டாள்.
“நர்மதா! இவர்தான் எங்காத்துக்காரர்”