பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 119 ஏகாம்பரம் எழுந்தார். பின்புறமாய் கைவளைத்து பிட்டத்தில் தூசித்தட்டினார். துர்க்கையம்மன் சிலைக்கு எதிரே, மூன்றடி உயரத்தில் நெடி தாய்ப் போய்க் கொண்டிருந்த அளிப்பாய்த்த திண்ணை இடைவெளியில் ஏறிக்கொண்டார். அம்மன் சிலையைவிட அவரது தலை சிறிது உயரமாக தூக்கி நின்றது. பத்மாசனம் போடுவதா, சித்தாசனம் போடுவதா என்று சிறிதுநேரம் யோசித்தார். இரண்டுமே அவருக்கு கால்வந்த கலை. ஆனாலும், சித்தாசனம் போட்டார். வசதிக்காக மட்டுமல்ல. சித் என்ற வார்த்தை அவருக்கு பிடிபட்ட சொல். அந்த சொல் செயல்வடிவம் பெறவேண்டும். அந்த சித்திற்காகத்தான் இத்தனை முயற்சிகள். ஏகாம்பரத்தின் மடித்துப்போட்ட கால்கள் செவ்வகக்கோடு டாய் படர்ந்தன. உச்சந்தலையும், வட்டக்குதமும், நோர்க்கோட்டில் நின்றன. தோளின் முனைகளும், முட்டிக் கால் முனைகளும் அவர் பறக்கப்போவதற்கான இரட்டைச் சிறகுகளாய் தோற்றம் காட்டின. ஏகாம்பரம், தனது குருநாதரை நினைத்துக் கொண்டார். இந்த மழையைப்போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்த குருநாதர் இவரை விட, அவர் பதினைந்து வயது சிறியவர். தாடி மீசை உத்திராட்சம் இத்தியாதிகளைக் கொண்ட காவியுடை குருவல்ல. ஆசிரமவாசியுமல்ல. பேண்டும் சிலாக்கும் போட்டவர். சிலசமயங்களில், சட்டையை பேண்டுக்குள் மடித்துப் போட்டு கழுத்தில் டை கூடகட்டுகிறவர். புகழில்லாத ஒரு நிறுவனத்தின் பொறியாளர். தேர்ந்தெடுத்த ஒரு சிலரிடம் மட்டுமே ஆன்மீகத் தொடர்பு வைத்திருப்பவர். கருங்கல், பளிங்காய் ஆக்கப்பட்டது போல் ஆன்ம ஒளியில் மின்னும் கருப்பர். ஒரு நண்பர் இவரை அவரிடம் அழைத்துச் சென்றார். கையெடுத்து கும்பிட்ட இவரது கையைப் பிடித்து 'கிளாட்டு மீட் யு' என்று குலுக்கினார். அறிமுக