பக்கம்:ஆடரங்கு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

ஆடரங்கு

ராஜாமணி சொல்வான், "வியாதியோ வியாதியில்லையோ, பாட்டி தன் கணவனுடன் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஈடு செய்யக்கூடிய வழியிலே உன்னோடு-தன் பிள்ளையோடு, திருப்திகரமான வாழ்வு வாழ்ந்துவிட்டாள்!"

கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகளுக்கே இது பெரிய பெருமை தான். அந்தத் தாயின் மனம் கோணமல் நடந்துகொள்வது அவருக்குச் சாத்தியமாக இருந்தது, அவர் மனைவியின் உதவியால் தான். மாமியாரே போற்றிய மாட்டுப்பெண் அவள். ஆனால் அவளைப்பற்றி எல்லாம் நன்றியுடன் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள் நினைப்பது கூடக் கிடையாது. அவளைப்பற்றி நினைக்க ராஜாமணிக்கு இடமேயில்லை. அவனுடைய சிறு வயசிலேயே அவள் இறந்துவிட்டாள். பத்து வயசுக்குப் பிறகு தன் தாயை அறிய ராஜாமணிக்குச் சந்தர்ப்பமே தராமல் போய்விட்டாள்.

அவள் கணவனுக்கும் மாமியாருக்கும் கணவனின் தம்பிமார்களுக்கும் திருப்திகரமாக எப்படியோ நடந்துகொண்டு வாழ்க்கை நடத்திவிட்டாளே தவிர, அவ்வளவாகக் கெட்டிக்காரியல்ல. ஏழெட்டுக் குழந்தைகள் பெற்றெடுத்தாள். அவற்றில் மூத்தது ஒரு பெண்ணும் கடைசிக் குழந்தை ஒரு பிள்ளையுந்தான் மிஞ்சியது. பெண்ணுக்கு உரிய காலத்தில் உரியபடி கல்யாணம் செய்து வைத்தார் கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகள். ஆனால் அந்தப் பெண்ணின் அதிர்ஷ்டம் சரியாக இல்லை. மகா சுயநலக்காரர்களான அவள் கணவனும், கணவனின் தாயுமாகச் சேர்ந்து, பெண்ணின் நடத்தை சரியாக இல்லை என்று கதை கட்டிவிட்டு அவளைப் பிறந்த வீட்டுக்கே திருப்பியனுப்பி விட்டார்கள். இதைவிடப் பெரிய துக்கம் தாய்க்காரிக்கு வேறு என்ன வேண்டும்?

எப்போதுமே பலவீனமாக இருந்த தாய் தன் பெண் வீடு திரும்பிய இரண்டொரு வருஷங்களுக்குள்ளாகவே மன முடைந்து இறந்துவிட்டாள். தன் தகப்பனுக்கும் தம்பிக்கும் அதிகக் கஷ்டம் கொடுக்கக்கூடாது என்று எண்ணியவள் போல, அந்தப் பெண்ணும் தன் தாய் இறந்து நாலைந்து வருஷங்களுக்குள்ளாகவே இறந்துவிட்டடது, அவள் அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/101&oldid=1523515" இலிருந்து மீள்விக்கப்பட்டது