பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

மேல நீலித நல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புலமை வேங்கடாசலம் அவர்கள் இந்தப் பயனுள்ள ஆட்சி சொற்கள் அகராதியைத் தயாரித்துள்ளார்.

அவர் தமது முன்னுரையில் கூறுகிறார்:

“தமிழகத்தில் தமிழ்தான் ஆட்சிமொழி; அதனால் தமிழக அரசின் அலுவலகங்கள் அனைத்திலும் தமிழிலேயே கோப்புகள் எழுதியாக வேண்டும். எனினும், தமிழக அரசின் அலுவலகங்களில் சில இன்னமும் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்தாது இருக்கிறது."

வட நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணியாற்றும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அழகாகத் தமிழில் எழுதவும் பேசவும் செய்யும் போது நம்மவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு கௌரவமாக கருதுவதாக அவர் வருத்தப்படுகிறார்.

கேரளா, ஆந்திரா மாநில அரசு அலுவலகங்களில் அவர்களது மொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. அங்கெல்லாம் பட்டப்படிப்புக்கு தாய்மொழியே பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அத்தகைய கல்லூரிகள் அதிகம் இல்லை. ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள நினைப்பது சரியே. ஆனால் தமது மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித் துறையிலும் தமிழ்மொழியை பயன்படுத்துவது என்பதைக் கொள்கை அளவில் நீதிபதிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி சொற்கள்தான் கோப்புகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த அகராதி தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு முடிவுகளும் தமிழில் அறிவிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் சாமான்ய மக்கள் அரசின் கொள்கைகள், முடிவுகள் மற்றும் அரசின் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள முடியும். அவர்களும் அரசுக்கு அனுப்பும் தங்கள் மனுக்களில் இச் சொற்களை பயன்படுத்த முடியும்.

நடைமுறைக்குத் தேவைப்படும் எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் பொருத்தமான தமிழ்ப் பதங்கள் இந்த அகராதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதுபோல, இந்த நூல் அரசு அலுவலகங்களுக்கு மட்டுமல்லாது. அனைவருக்கும் பயன்படும்.

காலத்திற்கு ஏற்ற இந்த நூலை சிறப்பாகத் தயாரித்துள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர். இதை வெளியிட எமக்கு வாய்ப்பளித்ததற்கு அவருக்கு எமது உளமார்ந்த நன்றி.

- பதிப்பகத்தார்