உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்மை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஆண்மை

ஊர்ப் பேச்சிற்கும், பொச்சரிப்பிற்கும் பயந்து, அதிகாலையிலேயே ஆற்றிற்குச் சென்று விட்டு வந்து விடுவது வழக்கம். ஆத்தூரில், ஊருக்குச் சற்றுக் கூப்பிடு தூரத்தில்தான் ஆறு. ருக்மிணி பயமற்றவள்.

அன்று விடியற்காலை நிலா பால் போல் காய்ந்து கொண்டிருக்கிறது.

ருக்மிணி குடம் எடுத்துக் கொண்டு, குனிந்த தலை நிமிராமலே, ஆற்றிற்குச் செல்லுகிறாள்.

கண்களிலே சற்றுக் கூர்ந்து, முகத்துடன் நெருங்கி நோக்கினால், சந்திரனில் பிரதிபலிக்கும் கண்ணீர்.

அந்த ஆறுதான் அவள் கவலையைக் கேட்கும்.

ஆத்தூர் சிறிய ஸ்டேஷன். மூன்று மணி வண்டி கொஞ்ச நேரம்தான் நிற்கும். சீமா அதிலிருந்து இறங்கினான். எப்படியாவது, ருக்மிணியை அவள் பெற்றோருக்குத் தெரியாமல் காண்பது என்ற நினைப்பு. கண்டு அவளிடம் என்ன பேசுவது, என்ன சொல்வது என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை. அவளை எப்படித் தனியாக, இரகசியமாகச் சந்திப்பது என்று கூட எண்ணவில்லை. வீட்டின் பக்கம் சென்றால், வெளி முற்றத்திற்கு வரமாட்டாளா? வந்தால், தன்னை அடையாளம் கண்டு கொள்ள மாட்டாளா? என்ற நம்பிக்கை. அவன் அவளைச் சந்தித்து வெகு நாட்களாகி விட்டதென்ற, ஏறக்குறைய ஐந்து வருஷத்திற்கு மேலாகி விட்டதென்ற நினைப்பே இல்லை.

ஸ்டேஷனிலிருந்து வந்தால்—அதாவது, அங்கு வண்டிகள் கிடையாது. நடந்து வந்தால், அந்தப் பாலமற்ற ஆற்றைக் கடக்க வேண்டும்.

நடந்து வருகிறான்.

கரையேறி அக்ரகாரத்திற்கு நேராகச் செல்லும் பாதை வழியாக நடந்து வருகிறான். மனத்தில் பயம். கொஞ்சம் பட்பட் என்று அடித்துக் கொண்டது.

எதிரே ஒரு பெண் வருகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/15&oldid=1694203" இலிருந்து மீள்விக்கப்பட்டது