உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்மை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய கந்தப் புராணம்

61

பேராச்சி; இன்னும் ஒன்றிரண்டு குட்டிச் சுடலை மாடன்கள்; இவைதான் அத்தலத்தின் தெய்வங்கள்;—காவல் தெய்வங்கள்.

திரு அவதாரப் படலம்
திருநெல்வேலியில் நான்காவது முக்கிய விஷயம் கி.பி. 1918-ம் வருடம் ஒரு இரவில், திரு அம்மையப்ப பிள்ளைக்கும், சிவகாமி அம்மாளுக்குமாக—அந்த அம்மாள்தான் பங்கெடுத்துக் கொண்டார்கள்—திரு கந்தப்ப பிள்ளை இந்த உலகில் ஜனித்தார்.

பிறக்கும் பொழுது, உலகத்தில் ஒரு உற்பாதங்களும் தோன்றவில்லை. ஆனால் அவர் மற்றவரைப் போன்றவரல்ல என்பதை வருகையிலே, எடுத்துக் காண்பித்து விட்டார். இவருடைய தாயார் இவர் வரும் வரை, பிலாக்கணத்தையும், முனகலையும் கடைப்பிடித்திருந்தாலும், அவர் தாயின் வழியைப் பின்பற்றவில்லை. இதை அவர் தமது பெருமையை ஸ்தாபிக்க, சரியான வழியென்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர் வருகையின் வரவேற்புக் கமிட்டியின் தலைவரான மருத்துவச்சியம்மாள், அப்படி நினைக்கவில்லை. அவரைத் தலை கீழாகப் பிடித்துக் குலுக்கி, முதுகில் கொடுத்த அறையில் ஆரம்பித்த அழுகை, அவர் வாழ்க்கையின் சூக்ஷம தத்துவமாக, ஜீவியத்தின் இறுதி வரை இருந்தது.

திரு. கந்தப்பபிள்ளை இவ்வுலகத்தில் வந்த பிறகு, கார்த்திகைப் பெண்கள் அறுவரால் பாலூட்டி வளர்க்கப் படாவிட்டாலும், ஜாம்புத் தீபத்தின் மேற்கே இருக்கும் ஒரு ராஜ்யத்திலிருந்து வந்த இரும்பினாலான காமதேனுவின் பாலை, அதாவது. மெல்லின்ஸ் கிளாஸ்கோ, என்ற அம்ருதத்தை அருந்தி வளர்ந்தார் என்பதை உணர வேண்டும். பழைய ஹோதாவில் சிறு பறையும், சிறு தேரும் இழுத்துத் திரியா விட்டாலும், சிறு டிரமும் (Drum), சிறு தகர மோட்டாரும் அவருக்கு விளையாட்டுக் கருவிகளாக இருந்தன. சிவகாமியம்மாள், “செங்கீரையாடி யருளே” என்றும், “முத்தந் தருகவே” என்றும் சொல்லா விட்டாலும், கையிலிருந்ததை வைத்துக் கொண்டு, அவர் இந்த உலகத்தில் ஜனித்தவுடன், ஆரம்பித்த பிலாக்கண தத்துவத்தை நன்றாக வளர்த்து வந்தாள். காலா காலத்தில் வித்யாரம்பமும

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/60&oldid=1694481" இலிருந்து மீள்விக்கப்பட்டது