பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஆத்மாவின் ராகங்கள் செய்ததில்லை. எனவே அவருக்கு ஒரு காலத்தில் கொடுமை செய்தவர்களைப் பற்றிக் கடும் மொழியில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. இது கதையைப் போல் அமைவதற்கு அதுவும் ஒரு காரணம். 'இன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் எனக்குச் செலுத்தும் நன்றியை மனப்பூர்வமாக ஏற்று நான் அதை அப்படியே அந்தரங்கமாகவும், ஆன்ம பூர்வமாகவும் இன்னொரு வருக்குச் செலுத்திக் கொண்டிருக்கிறேன், ' என்று அவர் அடிக்கடி கூறிய அந்த இன்னொருவரைப் பற்றி எழுத முயலும்போது இதில் கவிதையின் மெருகேறிவிடலாம். எப்படியாயினும், இது ஒரு மகா புருஷனின் கதை. சகாப்தங்களின் எல்லைகளைப் பார்த்த சத்தியசீலரின் வரலாறு என்ற அளவில் இதைப் படைப்பதில் என் திறமை முழுவதையும் செலுத்தி எழுதியே ஆக வேண்டும். அவர் பிரியமாக அமர்ந்து, மாலைவேளைகளில் சத்திய சேவா ஆசிரமத்தின் அன்பு மாணவர்களிடம் உரையாடும் அந்தப் பிரம்மாண்டமான ஆலமரத்தடியிலிருந்து இந்தக் கதையை நான் எழுதத் தொடங்குகிறேன். அதற்காகவே சென்னைக்குப் போய்ச் சில நாள் தங்கிவிட்டு, ஒரு மாத லீவில் நான் மறுபடி இங்கே வந்தேன்.

(2)

மே மாதம் முதல் வாரம் சித்திரைத் திருவிழாவின் கலகலப்பும் இப்போது மதுரையில் இல்லை. வடக்குச் சித்திரை வீதியில் இருள் சூழ்ந்து விட்டது. என்ன காரணத்தாலோ முனிசிபல் விளக்குகள் பதினொரு மணிக்கே கண்மூடித் தூங்கிவிட்டன. மொட்டைக் கோபுரத்து முனியாண்டியைத் தூங்க வைப்பதற்கு தாலாட்டுப் பாடுவதுபோல், யாரோ ஒரு வேளார், அல்லியரசாணிமாலை ராகத்தில், மதுரை வீரன் கதையை உடுக்கடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். மீனாட்சி கோவில் மதில்களில் அது பயங்கரமாக எதிரொலித்துக்