பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

ஆசிரமத்தில் ஆண்கள் பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர், சிறுமிகள், சின்னஞ் சிறு சிசுக்கள் எல்லாருமே பூத்த பூக்களின் அழகுக் காட்சியைப் போல, மனித நேயத்தோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டு, ஆன்மீகச் சாதகர்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆசிரம ஆன்ம நேயர்களுக்கு கவலை என்றால் என்ன வென்றே தெரியாது; வறுமை வாட்டாது; ஒழுக்கம் ஓம்பலுண்டு; மனவேதனை அறியார் மகிழ்ச்சியே அவர்களது மன வானின் வளர் நிலவாகும் ஆசிரம சாதகர்கள் சுதந்திரப் பறவைகளாக ஆன்மீக வானில் பறந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது மிகையல்ல.

அரவிந்த ஆசிரமம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வரும் ஆன்மீக சாதகர்களின் தனியொரு தெய்வீகப் புனித பூமியாக நிலவி வருகின்றது. வாழ்க, அரவிந்தரின் மனித நேயம் மாண்புகளின் வளமை!