பக்கம்:ஆப்பிள் பசி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறகும் சாமண்ணா உட்காராமல் கூடத்துத் தூணில் சாய்ந்தும் சாயாமலும் நின்றபடி, “பரவாயில்லை மாமி!” என்றான்.

பக்த பிரகலாதன் நாடகத்தில் அவன் பிரகலாதனாக வந்து தூண் பக்கத்தில் நிற்கும் சாயல் போலவே இருந்தது அது. கோமளத்திற்குச் சிரிப்பு வந்துவிட்டது! சாமர்த்தியமாக அதை அடக்கிக் கொண்டாள்.

“சாமண்ணா! இப்போ என்ன செய்துண்டிருக்கே? எப்படி இருக்கே? உங்க டிராமா இல்லாமே இந்த டவுனே டல்லாப் போச்சுப்பா. ஊர்ல உற்சாகமே இல்லே. பாவம், இளைச்சுட்டியே!” என்றாள் ஆயாசத்தோடு.

“என்ன சொல்வேன் மாமி! நானும்தான் டிராமா இல்லாமே ரொம்பக் கஷ்டப்பட்டறேன். நாடக நடிகன்னா வாழ்க்கையில் அவன் வேறு எதுக்குமே லாயக்கில்லை! மத்தவா மாதிரி வேறு தொழில் செய்து பிழைக்கவும் தெரியாது. திரும்பவும் நாடகம் எப்ப ஆரம்பிக்கப் போறாங்கன்னுதான் நானும் காத்துட்டு இருக்கேன். ஹ்ம்... அதுக்கிடையிலே இந்தக் கேஸ் வேறே” என்று பெருமூச்சு விட்டான்.

“ஏன்? மிச்சப் பேரெல்லாம் என்ன செஞ்சிண்டிருக்கா? எல்லோரும் சேர்ந்து ஆரம்பிக்கலாமே!”

“செய்யலாம், பணம் வேணுமா?”

“பணமா?” என்று சற்றே பார்வையை உயர்த்திய கோமளம், “நீ நினைச்சா! பணம் வராதா என்ன?”

“எப்படி மாமி வரும்? நானே இங்கே சோற்றுக்கு லாட்டரி அடிச்சிண்டிருக்கேன்!

“அப்படியெல்லாம் பேசாதே! அனுமான் பலம் அனுமானுக்குத் தெரியாது. உன் நடிப்பிலே மயங்கிப் போனவா எத்தனை பேர் தெரியுமா? தலையெழுத்தா உனக்கு? கையில வெண்ணெயை வெச்சுண்டு நெய்க்கு அலைவாளோ?”

“கையில் வெண்ணெயே இல்லை. வெறும் திண்ணையிலதான் உட்கார்ந்துண்டுபொழுது போக்கறேன். வெண்ணெய் எங்கே இருக்கு?”

“நன்னா யோசிச்சுப் பார்த்தாத் தெரியும்.”

“புதிர் போடாதீங்க; எனக்கு ஒண்ணும் விளங்கலே.”

“அந்தப் பொண்ணு பாப்பா இருக்காளே! அவகிட்டே எக்கச்சக்கப் பணம் இருக்கே? உனக்காக அவள் உயிரையும் கொடுப்பாளே! லேசா ஒரு வார்த்தை விட்டாப் போதுமே! மகாலட்சுமி மாதிரி கொண்டு வந்து கொட்டுவாளே! உனக்கில்லாததா?”

“கொடுப்பாள்; ஆனால் அதிலே எனக்கு விருப்பமில்லையே...”

“ஏன் அப்படிச் சொல்றே?”

“காரணமாத்தாள்! எனக்கு இஷ்டமில்லைன்னா அதில-

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/68&oldid=1029581" இலிருந்து மீள்விக்கப்பட்டது