பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6. கரன்வதைப் படலம்

கரனை இராமன் கொன்றதைப் பற்றிய படலம் இது. இதற்குக் கரது டணாதியர் வதைப் படலம் எனவும், கர துடனாதி வதைப் படலம் எனவும், கரன் தூடணன் திரிசரன் வதைப் படலம் எனவும் சில சுவடிகளில் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. -

இராவணனின் தந்தை விச்சிரவசுக்குக் கேகசி, கும்பீனசி என மனைவியர் இருவர் இருந்தனர். இராவணன், கும்பகருணன், வீடணன், சூர்ப்பனகை ஆகியோர் கேகசி வயிற்றில் பிறந்தவர்கள்; கரன் துடணன் ஆகியோர் கும்பினசி வயிற்றில் பிறந்தவர்கள். இந்த முறையில் கரனும் துடணனும் இராவணனுக்குத் தம்பியராவர். திரிசரன் என்பவன் கரன் படையின் தலைமைத் தளபதியாவான்.

கணவனை இழந்த சூர்ப்பனகையை, இராவணன், தண்டகவனப் பகுதியில் தங்கி ஆட்சி புரியும்படி ஏவி, அவளுக்குத் துணையாகக் கரன் முதலியோரைக் கொண்ட பெரும்படையையும் அமைத்துத் தந்திருந்தான். இப்போது சூர்ப்பனகை முக்கறுபட்டு முறையிட்டதால் கரன் முதலியோர் படையெடுத்து வந்து இராமனால் கொல்லப் பட்டனர்.

இப்படலத்தில் கதைச் செய்தி மிகுதியாக இல்லை. போர்ப்படை பற்றியும் போர் பற்றியும் கற்பனையாகப் புனைந்துரைக்கப்பட்ட செய்திகளே இதில் மிகுதி, கதையை வளர்த்தி எழுதுவது எளிது. ஆனால், வெற்றுக் கற்பனைப் புனைவு எழுதுவது கடினம். இந்த அரிய முயற்சியில் கம்பர் வெற்றி பெற்றுள்ளார். இனிப் பாடல்களைப் பார்க்கலாம்.