பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

57


ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
யாரிவண் உளர்? அவர் யாண்டேனும் ஒழிக!”
ஆரியர் இருமின் ஆண்களிங் கிருமின்;
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருயின்!”

- என்று பலவாறாக ஆரியர்களையே - அல்லது அவரைச் சார்ந்தவர்களையே இந்நாட்டுக் குடிமக்களாக எண்ணிக் கொண்டு அவர் யாக்கும் வரிகள் இங்குள்ள எல்லாப் பிரிவினர்களையும் இழிவு செய்வனவாகும். வரலாற்றடிப்படையில் இந்நாட்டுக்கு உரிமையான ஓரினம் உண்டென்னும் ஒரு கருத்தை அவர் அடியோடு மறுப்பனவாகவே இவ்வரிகள் அமைகின்றன.

தமிழ்மொழியைப் பாராட்டுகையிலும், அஃது ஆரியச் சார்பு உடையதனால்தான் பெருமை கொண்டு விளங்குகின்றது என்னும் பொருள்படவே எழுதுகின்றாரே தவிர, அதன் தனித் தன்மை, பழைமைச் சிறப்பு, தாய்மை நிலை, வளமைக் கொழிப்பு முதலியன நிறைந்திருக்கும் தன்மையை அவர் ஒப்புக்கொள்வதில்லை. ஆதிசிவன் பெற்ற தமிழை ஆரிய மைந்தன் அகத்தியன்தான் சிறப்புறச் செய்தான் என்பது பாரதியார் கருத்து. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தது கி.மு. 1500இலிருந்து 2000க்குள் எனக் கூறலாம். அவர் தென்னாடு வந்தது அதற்குப் பின்னர்தான். அக்காலத்திற்கு முன்பே தமிழ் மிகவும் சிறப்புற்று விளங்கியிருந்தது. அவர்கள் தென்னாடு வந்தபின் அஃதாவது கடைக் கழகக் காலத்திற்குப் பின்னர்தான் தமிழ்மொழி, தமிழ் நாகரிகம், தமிழர் பண்பாடு முதலிய யாவும் சிதையத் தொடங்கின. இவர்கள் கூறிப் பெருமைப்படும் சமசுக்கிருத மொழி அதன் பின்னர்தான் செயற்கையாக உருவாக்கப் பெற்றது. இந்த வரலாற்று நிலைகளை யெல்லாம் உணராமல் அல்லது உணர்ந்தும் ஒப்புக்கொள்ளாமல் அல்லது ஒப்புக்கொண்டும் அவற்றை அடியோடு மறைக்கின்ற முயற்சியில் தமிழ்த்தாய் உரைப்பதாகப் பாரதியார் இப்படி எழுதுகிறார்.

ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”

அகத்தியர் அகத்தியம் என்னும் இலக்கணத்தையும் நாரதர் பஞ்ச பாரதீயம் என்னும் இசைத்தமிழ் இலக்கண நூலையும் இயற்றியது உண்மைதான். தமிழில் ஏற்கனவே இருந்த நூல்களை