பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடக்கும் தெற்கும் கி.மு. 500 முதல் கி.மு. 1 வரை

117


தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு ஒளிகாட்டும், கல்வெட்டுக்களை அக்குகைகளில் விட்டுச் சென்றுள்ளனர்.

பெளத்த நாடோடிகள்

சமணர்களைப் போலவே, பெளத்தர்களும் தம் யோக நெறியை அமைதி குலையாமல் பயில்வதற்கு ஏற்ற தனிமை இடங்களைத் தேடி , தென்னிந்தியாவுக்கு அலைந்து திரிந்து வந்து சேர்ந்தனர். அவர்களும், இயற்கைக்குகைகளில் வாழ்ந்து கல்வெட்டுக்களை விட்டுச் சென்றனர். பல இடங்களில், குறிப்பிட்ட ஒரு குகை, சமணர் வாழ்ந்ததா, பெளத்தர் வாழ்ந்ததா என்பதை அறிந்துகொள்வதில் சிறிது சிரமமே. அது போலும் குகைகள், பாண்டிய, சேர நாட்டுப் பல்வேறு மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெளத்த சந்நியாசிகளின், தொடக்ககால இக்குடி பெயர்ச்சிக்கு அரசியலோ, சமயம் பரப்பும் ஆர்வமோ, காரணங்களாகா. பண்டைக்கால ரிஷிகளைப் போலவே, கி.மு. ஐந்து மற்றும் நான்காம் நூற்றாண்டு புத்த பிக்குகளும், அரசர்களின் நிறைமனத்தோடு படாத ஆதரவிலிருந்தும், துறவறச் சந்நியாசிகளை வரையறையின்றி மகிழ்விப்பதன் மூலம் மிகப் பலவாய புண்ணியத்தையும், மலிவான தகுதிப்பாட்டையும் பெறத் துடிக்கும், பொறுப்பற்ற மாணவர்களின், பொறுக்கவொண்ணாப் போலிப் புகழ்ப்பாட்டிலிருந்தும் தப்பித்துக் கொள்ளவே, தங்கள் சொந்த மாநிலங்களை விட்டு வெளியேறினர். சமணர்களும், பௌத்தர்களும் முறையான மனப்பயிற்சியினை யோக முறை மூலம், மேற்கொள்ளுதல் வேண்டும்; அதன் வெற்றிப் பயிற்சிக்குத் தனிமை தேவை. சமணர்களுக்கு, இவற்றிற்கு மேலாக, சல்லெகனம்" என அழைக்கப்படும் ஒருவகைத் தனிச்சிறப்பு வாய்ந்த முறையாம் வடக்கிருந்து அமைதியாக உயிர் விடுதற்கு ஏற்புடைய மக்கள் நடமாட்டத்திற்கு அப்பாற்பட்ட உறைவிடமும், தேவைப் பட்டது. பண்டைக்காலத்தைச் சேர்ந்த இம் முனிவர்களுக்கு, உயிரைக் காக்கத் துடிக்கும் பேராசை எதுவும் இல்லை. மகாவீரரும், புத்தரும் மக்களைப் பெருங்கூட்டமாக வானுலகிற்கு அனுப்புவனவாகச் சமயங்களைக் கருதவில்லை.