பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின்...

199


பாட்டுடைத் தலைவர்களாம் கல்வி உரிமையும் அனுபவிக்கும் முதல் மூன்று வருணவத்தவர் அடங்கிய நான்கு வருணத்தவர்களாக மக்களைப் பிரிப்பதே சமுதாய அமைப்பின் விதிமுறையாகும் என்பது தொல்காப்பியர்க்கு உரிய கருத்து. ஆனால், அவர் கற்ற தமிழ் பாடல்களில், ஆரியக் கொள்கைப்படி, மிகவும் இழிந்தவர்களான, வேட்டையாடும் இனத்தின் தலைவனும், மீன் பிடிக்கும் இனத்தின் தலைவனும், காதற்பாக்களின் தலைவராவர். இம்முரண்பாட்டை விளக்க, அவர் எடுத்துக் கொள்ள முயற்சி மிகவும் குறைபாடுடையது வேண்டாவிருப்பானது. மேலும், ஆரியச் சமுதாய விதிமுறைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமண முறைகள் எட்டு உள்ளன. ஆனால், தமிழ்ப் பாக்களில் இரண்டே உள்ளன. இவ்விரு முறைகளையும் ஒன்று எனக்காட்ட, அவர் வீணே முயன்றுள்ளார். தமிழ் அகத்திணை ஒழுக்கம், சமஸ்கிருதக் காம ஒழுக்கத்தைவிட மென்மையானதாம்; தர்ம அர்த்த மோக்ஷங்களைத், தமிழ்ப் புறத்திணை ஒழுக்கங்களில் திணித்துவிட முடியாதாம் என்றாலும், உரையாசிரியர் பலரும் வீணே முயல்வது போலவே, தொல்காப்பியரும், காதலும், போருமே வாழ்க்கையின் குறிக்கோளாம் எனக் கருதும் தமிழர் வாழ்க்கை முறையைத் தர்ம, அர்த்த , காம மோக்ஷமே வாழ்க்கையின் குறிக்கோளரம் எனக்கருதும் ஆரியர். வாழ்க்கை முறையோடு பொருத்திக்காண முயன்றுள்ளார். பொருளதிகாரம், கடைசி அதிகாரத்தில், தம் காலத்தில் தமிழில் இடம்பெறாத, ஆனால், தமக்குத் தெரிந்த சமஸ்கிருத எடுத்துக் காட்டுக்கள் உள்ள, பல இலக்கிய வடிவங்களை விவரித்துக் கூறியுள்ளார். இவையும், இவை போலும் பல இடங்களில் தமிழுக்கு உரியன அல்லாதனவற்றைத் தமிழ்ப்பாக்கள் குறித்த தம்முடைய இலக்கணத்தில் புகுத்தியுள்ளார். அதனால், தொல்காப்பியர் இவ்வாறு செய்யுமிடங்களில், அவருடைய உரையாசிரியர்களால், அவர் கூற்றிற்குத் தேவையான எடுத்துக் காட்டுகளைத் தமிழிலிருந்து காட்ட முடியாமல் போவது வியப்பினைத் தருவதில்லை. தொல்காப்பியர், தமிழில் புகுத்தும், மற்றும் இரு ஆரியக் கொள்கைகள் பற்றி அவருடைய காலம் குறித்த ஆய்வின்போது தெளிவாகக் கூறப்படும்.