பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

249



நெற்றியினையும் வலிமிகுதலினால் முழங்கும், வாய்வரை வந்து ஒழுகும் மத நீரினையும், கூற்றுவனுக்கு நிகரான ஆற்றலும் நிலத்தை அறைந்து, பகைவரை அணுகச் சென்று கொல்வதில் தப்பாத, நினைத்தாலே நடுங்கப்பண்ணும், தொங்கும் கையினையும் உடைய கொடிய பெரிய யானைப் படையினையும், நெடிய தேர்ப்படையினையும் உடைய சேரனுக்கு உரிய , செல்வத்தால் சிறந்த மிகப் பெரிய நகரமாகிய கருவூரின் துறையில், தெளிந்த நீர் ஓடும் குளிர்ந்த ஆன் பொருநை ஆறு, உயர்ந்த கரையில் குவித்துள்ள மணலின் எண்ணிக்கையிலும், பலவாக, நாம் தழுவி இன்புறுவோம்; நெஞ்சே! வருவாயாக!

"கேள்கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு, புகல் சிறந்து,
ஆரம் கண்ணி, அடுபோர்ச் சோழர்,
அறம்கெழு நல்லவை உறந்தை அன்ன,
பெறலரும் செய்வினை முற்றினம், ஆயின்;
அரண்பல் படர்ந்த முரண்கொள் தானை
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாளங் காடி நாறும் நறுநுதல்,
நீள் இரும் கூந்தல், மாஅ யோளொடு,
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்,
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை,
நிவந்த பள்ளி, நெடும் சுடர் விளக்கத்து
நிலம் கேழ் ஆகம், பூண்டுப் பொறிப்ப,
முயங்குவம்; சென்மோ ; நெஞ்சே ; வரிநுதல்
வயம் திகழ்பு இமிழ்தரும் வாய்புகு கடாத்து
மீளி மொய்ம்பொடு நிலன்எறியாக் குறுகி
ஆள்கோள் பிழையா அஞ்சுவரு தடக்கைக்
கடும்பகட்டு யானை, நெடுந்தேர்க் கோதை
திருமா வியன்நகர்க் கருவூர் முன் துறைத்
தெண்ணீர் உயர்கரைக் கவைஇய
தண்ஆன் பொருநை மணலினும் பலவே".
                            -அகம் : 93