பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழர் பண்பாடு


வனாம் உழவனுக்கு நிலத்தை உழுதபின்னர், நெல், முதலாம் - உணவுப் பொருட்களை விளைவிக்கும் முறையினைக் கற்றுத்தந்தது. ஆறுகளின் இரு பக்கங்களிலும், படிப்படி யாகத் தாழ்ந்து செல்லும் நில அமைப்பு, தங்கள் விளை நிலங்களுக்கு உயிர் ஊட்டும் நீரைக் கொண்டு செல்லும் முறையினை, வெள்ளத்தை, அது விரும்புமாறு ஓடவிடாது, தாம் விரும்புமாறு கொண்டு சென்று, வெள்ளநீரை ஆட்சி கொள்ளவல்லராகிய வெள்ளாளர்க்குக் கற்றுத் தந்தது. மழை நீரை ஏரி, குளங்களில் தேக்கி வைத்துப், பாசனக் கால்வாய்கள் மூலம் தங்கள் விளை நிலங்களுக்குச் செலுத்தவும், கிணறுகளிலிருந்தும், நீர் ஊறும் கசங்களில் லிருந்தும் நீரேற்றுவான் மூலம் நீரை மேலே கொணர்ந்து, தாங்கள் பயிரிடும் நிலத்துண்டுகளுக்குப் பாசனம் அளிக்க வல்லவரும், பெய் எனக் கூறும்போது பெய்யுமாறு கார்மேகங்கள் மீது ஆட்சி செலுத்த வல்லவருமாகிய காராளர் ஆற்றுப்படுகைக்கு அப்பாற்பட்ட மேட்டுப்பகுதி களில் வாழ்ந்திருந்தனர்.

தென்னிந்திய உழவர் பெருமக்களின் உழவு பற்றிய மதி நலத்திற்கு, இன்றைய அறிவியல், ஒரு சிறிதே துணை புரியவல்லதாம் என்பதற்கேற்ப, உழவுத்தொழில் பற்றிய கலைகள், நன்மிகப் பழங்காலத்திலேயே முழுமை பெற்று விட்டன. ஆற்றுப்படுகைக்கு அப்பால் வெள்ளத்தால் அரிப்புண்டு அடித்துக் கொண்டுவரப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மண்ணும், தண்டகன் பெயர் பெறும் காட்டின் அழிந்த புல் பூண்டுகளின் கூளமும் கலந்த கலவையாம் நிலப்பகுதி, ஆற்றுப்படுகைக்கு அப்பால் கிடந்தது. இந்நிலப்பகுதிதான், பருத்திச் செடியின் பிறப்பிடம். புதிய கற்காலத்து மனிதன், பருத்தியை நூலாக நூற்கவும், அந்நூலை ஆடையாக நெய்யவும் கற்றுக் கொண்டான்.

தம்முடைய தேவைக்கு மேல் குவிந்துவிட்ட உணவுப் பொருட்களையும், பருத்தி ஆடைகளையும் சேர்த்து வைக்க, மாந்தர், மரத்தாலான வீடுகளை, இப்போது கட்டத் தொடங்கினர். தேவைக்கு மேல் குவிந்துவிட்ட பொருட்களை மருத நிலத்தில் எளிதில் கிடைக்காத பொருட்களுக்காகப்