பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பாஸ்கரத் தொண்டைமான்


மலையைக் கண்டு அதில் வளரும் மரம் கொடிகளைக் கண்டு, அந்தச் செடிகளில் மலரும் மலர்களைக் கண்டு. அந்த மலர்களில் எழும் மணத்தினை நுகர்ந்து இன்பம் பெற்றிருக்கிறார்கள். அப்படியே அகன்ற பரந்த கடலிலே, அந்தக் கடல் அலைகளின் ஒலியிலே, அந்த ஒலி எழுப்பிய இன்னிசையிலே உள்ளம் பறிகொடுத்திருக்கிறார்கள். அஞ்சி வழிபட்ட உள்ளத்திலே அன்பு கலந்த இன்பம் பிறந்திருக்கிறது. இந்த இன்பத்தை உருவாக்க அழகுணர்ச்சி தோன்றியிருக்கிறது. அப்படித்தான் மலை மூலமாக, அலை மூலமாக, கலை மூலமாக, இறைவழிபாடு ஆரம்பித்து வளர்ந்திருக்கிறது. அந்த மலையையும், அலையையும், கலையையும் உருவகப்படுத்தியே மலை மகள், அலை மகள், கலை மகள்' என்று கற்பனை பண்ணியிருக்கிறார்கள். நின்று தொழுதிருக்கிறார்கள் விழுந்து வணங்கியிருக்கிறார்கள். இடையிடையே பழைய பயமும் விட்டபாடாக இல்லை. அந்தப் பயத்தை எல்லாம் எண்ணிய போது கலை மகள், அலை மகள், மலை மகள் மூன்று பேரையும் சேர்த்தே நினைத்திருக்கிறார்கள். அந்த மூன்று உருவமும் சேர்ந்த அன்னையைத் தான் பழையோள் - பராசக்தி என்று போற்றியிருக்கிறார்கள்.

இப்படித் தோன்றிய இறை உணர்ச்சிக்கே அடிப்படை அழகுணர்ச்சிதான். பார்க்கும் மரங்களில் எல்லாம் இறைவனின் பசிய நிறத்தைக் கண்டவன் தமிழன், கேட்கும் ஒலியில் எல்லாம் அவன் கீதத்தைக் கேட்டவன் தமிழன். தீக்குள் விரலை வைத்த போதும் அவனைத் தீண்டும் இன்பமே பெற்றவன் தமிழன். இத்தகைய தமிழன் அழகையே தன் வழிபடு தெய்வமாக அமைத்துக் கொண்டதில் வியப்பில்லை தானே? அழகை ஆராதிக்கத் தெரிந்தவனே, அழகனை, இளைஞனை, குமரனை இயற்கையில் கண்டு மகிழ்ந்திருக்கிறான், இப்படித்தான் தமிழர் கடவுளான முருகன், குமரன் உருவாகி இருக்கிறான் தமிழர்கள் உள்ளத்திலே இறுதி இல்லாத நீல வானத்தை, நீலத் தோகை விரித்தாடும் மயிலாகக் கண்டிருக்கிறான். அந்த வானம் எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் தத்துவத்தையே முருகனாகக் கொண்டிருக்கிறான். எட்டும் குலகிரி எட்டும் விட்டோட, எட்டாத வெளிமட்டும் பதைய விரிக்கும் கலாப மயூரத்தன் உருவாகி இருக்கிறான். இச்சைக்கு உகந்த சக்தியை வள்ளியாகவும் கிரியைக்கு உகந்த சக்தியை தெய்வானையாகவும்